கொரோனா வேகமாகப் பரவி வருவதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.இந்த ஊரடங்கு நாளை இரவு 9 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் இதுவரை 1,69,60,172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,92,311 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தினந்தோறும் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் 3ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இரவு ஊரடங்குடன் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் நேற்றைய தினத்தில் 34,000 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் இன்று முழு ஊரடங்கிற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு நாளை இரவு முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களுக்கான கடை காலை 6 மணி முதல் 10 மணிக்கு வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சேவைகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள், தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







