கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் மிக முக்கியமான 9 நாளான இன்று தேர்த்திருவிழா தொடங்கியது.
பாரம்பரியமாக யானை கொண்டு வந்து தேரில் போடுகின்ற தடியை எடுத்து ரதவீதிகளில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு தடியை யானை கொண்டு வரவில்லை. அதுமட்டுமல்லாமல் பத்து நாட்களுக்கு யானை மேல் கும்பம் வைத்து கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது இயல்பு. இந்த முறை ஒருநாள் கூட யானை வரவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும், மீன் வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் வருடங்களில் யானையை வர வைப்பதாக அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
-ம.பவித்ரா








