லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் விண்ணை முட்டும் அளவுக்கு மெகா வெற்றி பெற்றுள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது. தன்னுடைய சினிமா பயணத்தில் இதுவரை கண்டிராத மகத்தான ப்ளாக் பஸ்டர் வெற்றியை இந்த படம் கொடுத்திருப்பதாக நடிகர் கமல்ஹாசனே பெருமை கொள்ளும் அளவிற்கு அவரின் சினிமா வாழ்வின் மகத்தான வெற்றியாக விக்ரம் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமல் செய்யாத முயற்சிகளே இல்லை. நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் என சகலகலா வல்லவனாக வலம் வந்த போதிலும் அவரின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தீனி போடும் அளவிலான மெகா வெற்றிகளை அவரால் சுவைக்க முடிந்ததில்லை என்றே சொல்லலாம். 70-களின் இறுதியில் தொடங்கி இன்று வரை தொடரும் ரஜினி- கமலின் ரேஸில் கூட தொடர்ந்து ரஜினியின் கைகளே ஓங்கியிருந்தது. இந்நிலையில், ரஜினி, விஜய், அஜித் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு அசாத்திய வெற்றியை கொடுத்திருக்கிறது விக்ரம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விமர்சன ரீதியாக படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் கணக்கை வைத்து தான் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 கோடி ரூபாய் வசூலை தாண்டுவதை சாதனையாக கருதியவர்கள், பிறகு 200 கோடி என மாறி தற்போது 300 கோடி ரூபாய் வசூலை தாண்டினால் தான் ‘மாஸ் வெற்றி’ என டார்கெட் வைத்துக் கொண்டனர். அந்த வகையில் பார்க்கும் போது விக்ரம் வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாக கூறுகின்றனர் சினிமா வல்லுநர்கள். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் படங்களை தொடர்ந்து கமல் படமும் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதமாக இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் கூறுப்படுகிறது.
இதற்கு முன்பாக ரஜினியின் கபாலி, எந்திரன் 2.0 விஜய்யின் பிகில் ஆகிய படங்கள் 300 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறைந்த நாட்களிலேயே விரைவாக 300 கோடி வசூலை நெருங்கியதில் எந்திரன் 2.0வுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது கமலின் விக்ரம். இப்படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் விரைவில் விஜயின் பிகில் படத்தின் மொத்த வசூலையும் விக்ரம் மிஞ்சிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இடையில் விட்டுப்போன ரஜினி-கமல் யுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அடுத்தடுத்து வரவிருக்கும் ரஜினி கமல் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கப்போகிறது எனவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.







