கடைசி விவசாயி விமர்சனம்

வாழ்ந்து கெட்ட நிலவுடைமை சமூகத்தின் சாட்சியாய் இருக்கும் மனிதர்கள். விலைநிலங்களை விற்பனை செய்து விட்டு வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் கிராமம். குல தெய்வ திருவிழா நடத்தினால் கிராமத்தின் ஒட்டு மொத்த வறுமையும் வேதனையும்…

வாழ்ந்து கெட்ட நிலவுடைமை சமூகத்தின் சாட்சியாய் இருக்கும் மனிதர்கள். விலைநிலங்களை விற்பனை செய்து விட்டு வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் கிராமம். குல தெய்வ திருவிழா நடத்தினால் கிராமத்தின் ஒட்டு மொத்த வறுமையும் வேதனையும் தீந்துவிடும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.

குல தெய்வத்திற்கு நெல் படைப்பதற்கு, ஊரில் விவசாயத்தை கைவிடாத மூத்த விவசாயி மாயாண்டியிடம் கோரிக்கை வைக்கின்றனர் கிராம மக்கள். தனது நிலத்தை எவ்வளவு விலைக்கு கேட்டும் கொடுக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மாயாண்டி, கோரிக்கையை ஏற்று பயிரிடுகிறார்.

அப்போது, சில சூழ்ச்சியால் காவல்துறையால் மாயாண்டி கைது செய்யப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது, மாயாண்டி பயிரை அறுவடை செய்தாரா… திருவிழா நடந்ததா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

எளிய மனிதர்களின் வெள்ளந்தித் தனத்தின் மூலமாக நவீனத்தின் போலி பக்கங்களை உடைத்து, பெரிய வில்லன்களும் சதிகளும் இல்லாது, நடப்பு சூழல்.. எளிய மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள், ஒரு குக்கிராமத்தின் ஆன்மாவை அச்சு அசலான மனிதர்களின் மூலமும், தருணங்களின் மூலமும் தொட்டிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

பெரியவர் மாயாண்டி (நல்லாண்டி)( தற்போது அவர் மறைந்துவிட்டிருக்கிறார்) படத்தை தாங்கி நிற்கும் கதாபாத்திரம். படத்தின் நாயகனும் அவரே. போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் கதாபாத்திரம், குட்டை பெண் கதாபாத்திரம், நீதிபதியாக வரும் ரேச்சல் ரெபேகா கதாபாத்திரம், பாட்டிகள் கதாபாத்திரம் என அனைவரும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.தென் மாவட்ட கிராமத்தை துல்லியமாக பதிவு செய்த ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

மரபணு விதைகள் , ஆபத்தான பூச்சிக் கொல்லி மருந்துகள், நிலத்தை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி விட வட்டமடித்துக் கொண்டிருக்கும் தரகர்கள் என சமகாலத்தில் சிறு நிலவுடமைச் சமூக விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகளையும் படம் பேசுகிறது.

100 நாட்கள் வேலை திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுகிறது கூலி வேல செய்ய ஆள் இல்லை. உழைக்காமல் சம்பளம் வாங்குறாங்க போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தூவவே செய்திருக்கிறார் மணிகண்டன்.

கிராமங்கள் சாதித் தீவுகள். எளிய மனிதர்களிடமும் சாதி இறுக்கமாய் செயல்படுகிறது என்பதே எதார்த்தம். சாதி கடந்த என்ற நிலை கிராமங்களில் அவ்வளவு சுலபத்தில் சாத்தியமா ? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இருப்பினும் திருவிழாக்கள் மூலம் எல்லா சமூக மக்களையும் ஒன்றிணைக்க முயற்சியில் திருப்தி அடைகிறார் இயக்குநர்.

நடிகர்கள் அல்லாத அசல் கிராமத்து மனிதர்களை வெகு சிறப்பாக நடிக்க வைத்தது இயக்குனர் நிகழ்த்திய சாதனை. அதுவும் மாயாண்டி கதாபாத்திரம் எந்த இடத்திலும் நடித்ததாக தோன்றவில்லை, அவர் தன் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்ததாகவே இருந்தது. ராமையாவாக வரும் விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட கதா பாத்திரத்தை தனக்கோயுரிய திரை மொழியில் அசத்தியிருக்கிறார்.

மயில் ஒன்று அரூப பாத்திரமாக வந்துக்கொண்டே இருக்கிறது. மயில் போலவே விஜய்சேதுபதியும் அரூபமாகிறார். சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

கிராமம் என்றால் வழக்கமாக காட்சிபடுத்தப்படும் டெம்ப்லேட்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு அழைத்துச்செல்லும் கடைவி விவசாயி திரைப்படம் இயக்குநர் மணிகண்டனின் பட வரிசையில் ஒரு மைல் கல்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.