குடியரசு துணை தலைவராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 528 வாக்குகள் பெற்று அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவியாக குடியரசு துணை தலைவர் பதவி கருதப்படுகிறது. குடியரசு துணை தலைவரே மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார். தற்போது குடியரசு தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் களம் இறங்கினார். எதிர்க்கட்சிகள் சார்பில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் மார்க்கரெட் ஆல்வா களம் இறங்கினார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எனவே இரு அவைகளிலும் உள்ள அக்கட்சியின் 36 எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் காலியாக உள்ள 8 இடங்கள் தவிர்த்து மொத்தம் 744 எம்.பிக்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதில் 725 வாக்குகளே பதிவாகின. பதிவான 725 வாக்குகளில், 528 வாக்குகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு கிடைத்துள்ளது. ஆதாவது பதிவான வாக்குகளில் சுமார் 73 சதவீத வாக்குகளை ஜெகதீப் தன்கர் பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக களம் இறங்கிய மார்க்கரெட் ஆல்வாவிற்கு 182 வாக்குகளே கிடைத்துள்ளதாகவும், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளதாகவும் மக்களவை பொதுச் செயலாளரும் குடியரசு துணை தலைவர் தேர்தலை நடத்திய அதிகாரியுமான உத்பால் கே.சிங் அறிவித்தார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








