நாடாளுமன்ற தேர்தல்: இபிஎஸ் சொன்னதும்…ஓபிஎஸ் சொல்லாததும்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அன்று அதிமுக சார்பில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒரே கட்சி, ஒரே அணியாக நிகழ்ந்திருக்க வேண்டிய உறுதி மொழி ஏற்பு கடந்த 6 ஆண்டுகளாக…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அன்று அதிமுக சார்பில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒரே கட்சி, ஒரே அணியாக நிகழ்ந்திருக்க வேண்டிய உறுதி மொழி ஏற்பு கடந்த 6 ஆண்டுகளாக ஏற்பட்ட அதிரடி அரசியல் திருப்பங்களால் 4 தனித்தனி உறுதிமொழி ஏற்புகளாக நடந்தேறியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய 4 தலைவர்களின் தலைமையில் தனி தனியாக எடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவுநாள் உறுதிமொழி ஏற்புகளில் பொதுவாக காணப்படும் அம்சம் என்ன, அதிமுக உட்கட்சி பூசலை நினைவூட்டும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் என்ன? என்பது குறித்து அலசுவோம்.

திமுக அரசுக்கு எதிர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழ்பாடி அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதை தாண்டி 4 அணியினரின் உறுதி மொழிகளிலும் பொதுவாக காணப்படும் ஒரு விஷயம்  திமுக அரசுக்கு எதிர்ப்பு.  நீட்தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை  திமுக அரசு நிறைவேற்றாதது குறித்து உறுதிமொழிகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும் உறுதிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள.  சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை தமது அறிக்கைகளில் கடுமையாக சாடிவந்தாலும் அதைவிட காட்டமான வாசகங்களோடு அவரது அணியினரின் உறுதிமொழி ஏற்பில் திமுக அரசு விமர்சிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசைக் கண்டிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாக ஒரு விமர்சனம் இருந்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் ஓபிஎஸ் அணியினரின் உறுதிமொழி ஏற்பில் திமுக அரசுக்கு எதிராக கடுமை காட்டப்பட்டிருந்தது.

அதிமுக உட்கட்சி பூசல்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடுக்கப்பட்ட உறுதிமொழியில் ஒரு பத்தி கட்சியை சுற்றி தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்புகளை சுட்டிக்காட்டுவதுபோல் உள்ளது. ”அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர், மக்களுக்கு தொண்டாற்றி தொண்டாற்றி தலைத்து நிற்கும் ஆலமரம், இதை அசைத்துப்பார்க்க முடியுமா?, உடைத்துப்பார்க்க முடியுமா?, கட்டிக்காப்போம், கட்டிக்காப்போம், கழகத்தை கட்டிக்காப்போம்” என்ற வாசகம் ஓபிஎஸ் அணியினருக்கும், திமுகவினருக்கும் சவால் விடுப்பது போல் உள்ளதாகக் கருதப்படுகிறது.

”அதிமுக தலைவர் தொண்டர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் நிலைநிறுத்தப்பட்ட விதியை,  சதியின் துணைகொண்டு தன்னலத்திற்காக மாற்றிய சர்வாதிகார போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்ற உறுதிமொழியை ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்தின் முன்பு எடுத்தனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மீட்டெடுத்து சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டுவோம் என்கிற சபதத்தையும் அவர்கள் ஏற்றனர். சர்வாதிகார போக்கிற்கு முடிவுகட்டுவோம் என்கிற வாசகத்தை திரும்ப திரும்ப கூறி எடப்பாடி பழனிசாமி அணியினரை ஓபிஎஸ் தரப்பு சீண்டியது. ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தரச் பொதுச் செயலாளர் என்கிற நிலையை மீண்டும் உருவாக்குவோம் என்கிற சூளுரையையும் அவர்கள் ஏற்றனர்.

சசிகலா தலைமையில் எடுக்கப்பட்ட உறுதி மொழியில் அதிமுக ஒன்றுபட அழைப்புவிடுக்கும் வாசகங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. ”ஒரு தாய் வயிற்றுப்பிள்ளையாக, ஒரு தொண்டன்கூட விலகி நிற்காமல், ஓரணியில் நின்று, நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வென்று வீரநடைபோட நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்” என்று சசிகலா தரப்பினர் எடுத்த உறுதிமொழியில் சூளுரைக்கப்பட்டுள்ளது. ”ஒரு தொண்டன்கூட விலகி நிற்காமல்” என்ற வார்த்தையை திரும்ப திரும்ப அவர்கள் உச்சரித்தனர். எடப்பாடி பழனிசாமியை தாக்கும் வகையிலான வாசகங்கள் எதுவும் சசிகலா தரப்பினரின் உறுதிமொழியில் இடம்பெறவில்லை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழியில் எடப்பாடி பழனிசாமி அணியினரை மறைமுகமாக சாடுவது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை வென்றெடுக்க இனி அதிமுகவால் முடியாது, அமமுகவால்தான் முடியும் என்று குறிப்பிடுவது போன்ற வாசகங்கள் டிடிவி தினகரன் அணியினர் எடுத்த உறுதிமொழியில் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காட்கப்பட்ட அதிமுக,  ஒரு குழுவின், சுயநலத்தால் தனது தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்டதாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் எடுத்த உறுதிமொழி வாசகங்களில் காட்டமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

ஜெயலலிதா ஆட்சியை அமைக்க சூளுரை

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என 4 அணியினரின் உறுதிமொழிகளிலும் சூளுரைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கூட்டணி, மெகாக் கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மேற்கொள்வோம் என சூளுரைத்த அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியினர், நாற்பதும் நமதே நாளையும் நமதே என வீர சபதம் ஏற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச்செய்ய தற்போதே களப்பணியாற்றுவோம் என ஓபிஎஸ் அணியினர் சூளுரைத்தாலும், 40 இடங்களையும் வெல்வோம் என கூறப்படவில்லை அதிக இடங்களில் வெல்வோம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

கழக பொதுச் செயலாளர் சசிகலா என்கிற வாசகத்தை மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிய அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சசிகலா தலைமையில் அனைவரும் ஒன்றிணைவோம் என சூளுரைத்தனர்.   டிடிவி தினகரன் அணியினர் மேற்கொண்டுள்ள உறுதிமொழி ஏற்பில்,  டிடிவி தினகரன் தலைமையில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜெயலலிதா ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம் என  சூளுரைக்கப்பட்டுள்ளது. அதிமுக அணிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அதற்கு டிடிவி தினகரன் தலைமையேற்க வேண்டும் என்று இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.