“அருவருக்கத்தக்க வகையில் உள்ளது” – ட்ரம்ப் அரசின் மசோதாவை விமர்சித்த எலான் மஸ்க்!

ட்ரம்பின் அரசின் வரி மற்றும் சலுகை மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நெருங்கிய தொழிலதிபருமான எலான் மஸ்க், தற்போது ட்ரம்பின் வரி மசோதாவை விமர்சித்துள்ளது உலக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரது பிரச்சாரத்திற்காக 250 டாலர்களுக்கும் மேலாக செலவு செய்தவர் எலான் மஸ்க். மேலும் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன், அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறைக்கு தலைவராக பொறுப்பேற்றவர் எலான் மஸ்க். அரசுத் துறையின் பல்வேறு செலவீனங்களை குறைத்த எலான் மஸ்க், கடந்த வாரம் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

எலான் மஸ்க் பதவியில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க அரசு தாக்கல் செய்துள்ள வரி மற்றும் சலுகை மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“என்னை மன்னிக்கவும்… ஆனால் என்னால் இனி இதைத் தாங்கிக்கொள்ள முடியாது. மூர்க்கத்தனமான, காங்கிரஸின் இந்த செலவு மசோதா அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இதற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் செய்தது தவறு என்று உங்களுக்கே தெரியும்… உங்களுக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.