இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்?

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு…

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது;

தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளர்களாக நியமித்து அவர்களின் மூலம் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.