கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் 2022 ஜூன் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த கம்பம் டவுன் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு 2022 ஜூன் 8ஆம் தேதி மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் 2022 ஜூன் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே இப்பகுதியில் 2 முறை கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் போட்டிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், கிடா சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கு எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
– இரா.நம்பிராஜன்