அனைத்து துறை செயலாளர்களுக்கும் முதன்மை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் அரசியலில் விவாதப் பொருள் ஆன நிலையில் அதற்கு இறையன்பு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமர், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு விளக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், உங்கள் துறையின் மாநில, மத்திய நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாட்களில் அவற்றை ஆளுநரிடம் விவரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது அரசியலில் விவாதப் பொருள் ஆனது. இதற்கு காரணம் முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஆட்சி காலத்தில், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதுவே தற்போது விவாதப் பொருள் ஆவதற்கு காரணம்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்து துறை செயலாளர்களுக்கும் நான் அனுப்பிய கடிதம் வழக்கமான அலுவலக நடைமுறைதான்; ஆனால், அது அவசியமற்ற விவாத பொருளாகிவிட்டது. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்பது தெரியும்” என தெரிவித்தார்.







