சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களின் தகவல்களை திருடுவதற்கு இந்திய ஹேக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த தி சண்டே டைம்ஸ் மற்றும் புலனாய்வு இதழியல் அமைப்பு இணைந்து இந்தியாவில் ஹேக்கர்கள் பற்றி புலனாய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, கம்போடியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சகங்களின் கணினிக்குள் நுழைந்து விவரங்களை திருடுவதற்காக ஹேக்கர்களை மத்திய அரசு நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எவருடைய மின்னஞ்சலுக்குள்ளேயும் தன்னால் ஊடுருவி விட முடியும் என்று அத்தகைய ஹேக்கர்கள் கூறுவதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவர்களின் இலக்கு பட்டியலில், இந்திய தொழிலதிபர் அசோக் இந்துஜா, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பிபிசி செய்தி நிறுவன அரசியல் பிரிவு ஆசிரியர் கிறிஸ் மாசன் உட்பட முக்கிய நபர்களின் பெயர்கள் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஹேக்கர்கள் தாங்கள் ஹேக் செய்ய போகும் நபருடன், சமூக வலைதளங்கள் மூலமாக நட்பை உருவாக்குவார்கள் என்றும், அதன் பிறகு அந்த நபருக்கு வைரஸ் உள்ளடங்கிய இணைப்பை அனுப்புவார்கள் எனவும் தெரிவித்துள்ள தி சண்டே டைம்ஸ் பத்திரிகை, அந்த இணைப்பை அந்த நபர் கிளிக் செய்ததும், அவரது கணினி ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஹேக்கிங் வேலைக்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த ஹேக்கிங்களுக்கு 90% இந்திய ஹேக்கர்கள் தான்பயன்படுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








