இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இன்று மூறாவது நாளாக 20,000க்கும் கீழ் சென்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்தியுள்ள மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் சென்றுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 16,504 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிகப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,40,469 ஆக உயர்ந்துள்ளது. இதில் 99 லட்சத்து 44 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,49,649 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,35,978 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 17,56,35,761 உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







