இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் ரத்தானால் கூடுதல் தினத்தில் போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருவதை முன்னிட்டு, இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மாற்று தேதியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று ஆட்டம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், வரும் வாரம் முழுவதும் இலங்கையின் கொழும்புவில் 90% மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது தடைபட வாய்ப்புள்ளது. எனவே அன்றைய தினம் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதல் தினத்தை கொண்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இரு அணிகளும் முதன்முதலில் மோதிய போது, இலங்கையின் பல்லேகலேயில் மழை பெய்து போட்டி ரத்தானது. அதன் பின்னர் நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் முதல் சர்வதேசப் போட்டியில், அதே இடத்தில் மழை பெய்தது. இருப்பினும் போட்டியானது நடைபெற்று முடிந்தது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கொழும்பு போட்டிகள் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றும் திட்டத்தில் இருந்தது, ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து போட்டிகள் முதலில் திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறும் என அறிவித்துவிட்டது ஏசிசி. இந்த முடிவை பாகிஸ்தானும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டது.
எனவே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தேதியில் இந்த போட்டியானது மீண்டும் நடைபெறும். முன்னதாக இறுதிப் போட்டிக்கு கூடுதல் தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டிக்கும் கூடுதல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.