பாஜகவின் வெறுப்பு அரசியலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும் என நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்காக பேசுகிறேன் என்ற தலைப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் ஆடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமரின் மாடல் என்ன என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஏர் இந்தியா, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பாஜக அரசு சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
நெருக்கமான தொழிலதிபருக்காக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல், மத உணர்வை பிரதமர் கையில் எடுத்துள்ளதாக சாடினார்.
2002ல் குஜராத்தில் விதைத்த வன்முறை மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் வரை பரவி அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரிமுலம் பாஜக ஆளாத மாநிலங்களின் வருவாய்யை மத்திய அரசு பறித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் வரி பகிர்வில் 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு முத்திரை திட்டங்களாக எதையும் ஒன்றிய அரசு கொண்டுவரவில்லை என சாடினார். சமூக நிதி, சமத்துவம் காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும், பாஜகவின் வெறுப்பு அரசியலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும் என நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! #Speaking4India pic.twitter.com/C60TrlPTOG
— M.K.Stalin (@mkstalin) September 4, 2023