டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் காமெடியனாக மட்டுமே தமிழ் படங்களில் நடித்து வந்தார். பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
அந்த வகையில், நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும்சாதனை படைத்தது. இந்நிலையில் ஒரே மாத இடைவெளியில் சந்தானம் நடித்து வந்த கிக் திரைப்படம் செப்டம்பர் 01ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.




