அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இறுதியில் வெறும் 34.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 241 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி வரும் 12-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.








