மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால்
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நண்பகல் 12 மணி
நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 8,583 கன அடியாக
அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் டெல்டா பாசன
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து
நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதம் 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது காவிரி
நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அங்கிருந்து அதிக அளவிலான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து
8,583 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்மட்டம் 114. 810
அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக
விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூலை
12ஆம் தேதி மேட்டூர் அணை 68-வது முறையாக 100 அடியை எட்டிய நிலையில், மூன்று நாளில் 15 அடி அதிகரித்து இருப்பது டெல்டா பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பிருப்பதாக நீர் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








