”அடுத்து வெளியிடவுள்ள ஊழல் பட்டியலில் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்” – நீதிமன்றத்தில் ஆஜரான பின் அண்ணாமலை பேட்டி.!

”அடுத்து வெளியிடவுள்ள ஊழல் பட்டியலில் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்” என அவதூறு வழக்கில் ஆஜரான பின்னர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை…

”அடுத்து வெளியிடவுள்ள ஊழல் பட்டியலில் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்” என அவதூறு வழக்கில் ஆஜரான பின்னர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  இன்று ஆஜராகினார். இந்த நிலையில், பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் சைதாப்பேட்டை நீதிமன்ற வாயிலில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து  ஏராளமான காவலர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி #DMKfiles என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி , கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு எம்பி  உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் அண்ணமாலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் 500கோடி,100கோடி, 5கோடி ,1கோடி என நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார்

அதனைத் தொடந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைப்பதாக மனுவில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார் , மனுவை விசாரித்த நீதிபதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார். அண்ணாமலைக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் பால் கனகராஜ் , அலெக்ஸ் சுதாகர் அனிதா ஆகியோர் ஆஜராகினர்.  மேலும் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக வருகை தந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

“ சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு தொடந்து அவதூறு வழக்கில் அஜரானேன். Dmkfiles ஏப்ரல் 14 தேதி வெளியிட்டேன். திமுக முதல்வர் உட்பட 1000 கொடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும்; தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது; DMK FILES  பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம். பாஜக வழக்கறிஞர் அணி பலமாக உள்ளது. ”

சத்திய பிரமாணத்தில் பொய்களை சொல்லி உள்ளார் டி ஆர் பாலு. ஆகஸ்ட் மாதம் 3 வது வாரம் மீண்டும் ஆஜராக வர உள்ளோம். அப்போது டி.ஆர் பாலு குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.