முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்க்கு முன்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, உள்ளிட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக சார்பில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக மத்திய அரசு கொண்டுவரவுள்ள டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு, மணிப்பூர், பொது சிவில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெற வலியுறுத்துதல், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவற்றை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் பணி, கருணாநிதி நூற்றாண்டு விழா, தேர்தல் முன் தயாரிப்புகள் உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா







