இந்த வாரம் அதர்வா முரளி, ப்ரித்திமுகுந்தன் நடித்த இதயம்முரளி, பவிஷ் நடித்த லவ் ஓ லவ், வெற்றி நடித்த லஷ்மிகாந்தன் கொலை வழக்கு, பிருத்விராஜ் நடித்த ஐ, நோபடி, சத்யதேவ் நடித்த ராவ்பகதுார், புதுமுகங்கள் நடித்த முதற்கனல் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுகாக
இதயம்முரளி
பள்ளிமாணவனாக இருக்கும்போது ப்ரித்திமுகுந்தனையும், இளைஞனாக இருக்கும்போது கயாடுலோஹரையும் காதலிக்கிறார் அதர்வா முரளி. என்ன, இதயம் முரளி பாணியில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக அவருக்கும் மாளவிகாமோகனனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமண நாளும் வருகிறது. அந்த சமயத்திலாவது தனது காதலை சொன்னாரா அதர்வா? யாரிடம் சொன்னார்? அவருக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது என்பதை காதல் இளமை, பள்ளி வாழ்க்கை, பேச்சலர் லைப், நட்பு, எமோஷன் கலந்துகொடுத்து இருக்கிறார் ஆகாஷ்பாஸ்கரன்.

படத்தின் முதற்பாகம் வேகமாக, விறுவிறுப்பாக ரசிக்கும்படி நகர்கிறது. அதர்வாவின் ஸ்கூல் டேஸ், நண்பர்கள், காதல், குறும்பு, சண்டை யூத்புல் சீன்கள். பள்ளிமாணவன், இளைஞன், அடுத்த கட்டம் என அதர்வாவும் சிறப்பாக நடித்து இ ருக்கிறார். குறிப்பாக, காதல், டான்சில் பின்னி எடுக்கிறார். திருச்சி போர்ஷன், இடைவேளையில் காதலை சொல்ல துடிக்கும் இடம், கிளைமாக்சில் அதர்வா நடிப்புக்கு பொக்கே . பள்ளிமாணவியாக வரும் ப்ரித்திமுகுந்தனும், டாக்டராக வரும் கயாடுவும், மணப்பெண்ணாக வரும் மாளவிகாமோகனனும் தங்கள் பங்கிற்கு கலக்கியிருக்கிறார்கள். பாடல்காட்சியில் கவர்ந்து இழுக்கிறார்கள். தோழியாக வரும் ஏஞ்சலின், நிகாரிகா, நண்பனாக வரும் தமன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், ரக் ஷன் சீன்கள் கலகலப்பு. டீச்சராக வரும் ஜொனிட்டா செம பர்பார்மன்ஸ். இவர்களை தவிர, இந்த காதல் கதையை கேட்டுவிட்டு சில உதவிகள் செய்யும் வேடத்தில் பகத்பாசிலும் தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்களை இழுக்கிறார். நட்டி இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம்.
காதல் படமாக இருந்தாலும் நட்பு, எமோஷன் காட்சிகளும் செட்டாகி இருக்கிறது. என்ன, முதற்பாதியில் இருந்த விறுவிறுப்பு, பரபரப்பு, அடுத்த பாதியில் மிஸ்சிங்.அமெரிக்கா, கல்யாண போர்ஷன் போரடிக்கிறது. தமனின் பாடல்கள் ஓகே என்றாலும், இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம். காதலை, நட்பை கொண்டாடுபவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
லவ் ஓ லவ்
நான்கு ஆண்டுகள் காதலுக்காக , காதலி நாகதுர்காவுக்காக 15 லட்சம் செலவு செய்து கடனாளி ஆகிறார் ஹீரோ பவிஷ். ஆனாலும், அந்த காதல் சண்டையில் முடிகிறது. இருவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல, நான் பட்ட கஷ்டத்தை காதலியும் அனுபவிக்கணும். அடுத்த 4 மாதங்கள், என்னை மாதிரி அவரும் செலவு செய்யணும். அவரை கவனித்த மாதிரி, என்னை பார்க்கணும் என்று கண்டிசன் போடுகிறார் காதலன் பவிஷ். அதற்கு காதலி ஓகே சொல்ல, என்ன நடக்கிறது. அந்த காதல் ஜெயித்ததா? காதலி மனசு மாறினாரா என்பது லவ் ஓ லவ் கதை. கொஞ்சம் வித்தியாசமான காதல் கதை. இன்றைய காலகட்டத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் காதல் காரணமாக எப்படி கஷ்டப்படுகிறான். சில பெண்களால் அந்த காதலன் குடும்பத்தை இழந்து, பணத்தை இழந்து எப்படி தவிக்கிறான், ஒரு கட்டத்தில் பதிலுக்கு என்ன செய்கிறான்
என்பதை கொஞ்சம் காமெடி, கலாட்டா கலந்து கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்கள்.

நிக் படத்தில் நடித்த, தனுஷ் மருமகன் பவிஷ்க்கு அடுத்த படம், காதலனாக, பொறுப்புள்ள மகனாக, காதலை கொண்டாடுகிறார். காதலியை பழிவாங்குகிற காதலனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். பாடல்காட்சியில் கலக்கியிருக்கிறார். காமெடியு ம் அவருக்கு நன்றாக வருகிறது. செலவு வைக்கிற காதலியாக, அடிக்கடி சண்டைபோடுகிற காதலியாக, ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து தவிக்கிற காதலியாக நாகதுர்காவும் முத்திரை பதித்து இருக்கிறார். அவரும் டான்சில் கலக்குகிறார். போலீசாக வரும் செல்வராகவன், மாதர் சங்க தலைவியாக வரும் வனிதா, அப்பாவாக வரும் கே.எஸ்.ரவிக்குமார்.ஹீரோயின் அம்மாவாக வரும் ரம்யா உட்பட அவரவர் தங்கள் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள். பாக்சன் இசை, ரீமிக்ஸ் பாடல் மனதை கவர்கிறது. சில இடங்களில் ஓவர் சவுண்டு, நிறைய வசனங்கள் அலுப்பை தருகிறது.
காதல், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், கிளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது. யூத்புல்லான கதை என்பதால் இளைஞர்கள் ரசிப்பார்கள்.
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு
துாக்குதண்டனை கைதியாக இருக்கும் வெ ற்றி, துாக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அப்போது தனது கதையை பிளாஷ்பேக் ஆக சொல்கிறார். நான் சூழ்நிலை காரணமாக கொலை செய்தேன். துாக்குதண்டனையும் ஒருவகை கொலைதான் . அரசும், சட்டதிட்டங்களும் மாற வேண்டும் என்று ஜெயிலர் அதிகாரியுடன் விவாதம் செய்கிறார். ஹீரோ வெற்றி யாரை கொலை செய்தார்? ஏன் செ ய்தார்? அவர் துாக்கு தண்டனையில் இருந்து தப்பினாரா என்பது தயாள் பத்மநாபன் இயக்கிய லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதை.

1970களில் நடக்கும் இந்த வித்தியாசமான கதை, கொலைக்கான காரணம், அந்த சூழல்,
மனித நேயம், கைதிகளின் மனநிலை, துாக்குதண்டனைக்கு எதிரான கருத்து, சமூக சூழலை விரிவாக, அழுத்தமாக பேசுகிறது. படித்துவிட்டு நல்ல வேலை கிடைக்காமல் சூழ்நிலை காரணமாக திருடன் ஆகிறார் வெற்றி. பிரிகிடாவை காதலித்து திருமணம் செய்துவிட்டு, குடும்ப கஷ்டம், எதிர்காலத்துக்காக ஒரு பெரிய திருட்டில் ஈடுபட, அங்கே இருக்கும் பண்ணையாரை வேறு ஒரு காரணத்துக்காக கொல்கிறார். சிறைக்கு செல்கிறார். அந்த கேரக்டரில் மிக இயல்பாக நடித்து இருக்கிறார். இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்து, அரசு, தண்டனை விஷயங்கள் குறித்து அவர் கேட்கிற கேள்வியும், விவாதமும்தான் படத்தின் கரு. அந்த வசனங்களில் வெற்றி ஈர்க்கிறார். அதை சரியான நேரத்தில், சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். துாக்குதண்டனை பல நாட்டில் இல்லை. நம் நாட்டுக்கு தேவையா என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. வெற்றி மனைவியாக வரும் பிரிகிடா, ஜெயிலராக வரும் ரங்கராஜ் பாண்டே, அம்மாவாக வரும் லிசி, வில்லத்தனமான பண்ணையாராக வரும் கவிதாபாரதி ஆகியோர் நடிப்பும், அந்த கேரக்டர் பின்னணியும் படத்துக்கு பிளஸ். திருடனாக மாறன் வரும் காட்சிகள் கலகலப்பு. கவுரவ வேடத்தில் நீதிபதியாக வரும் கன்யாபாரதியும், அவர் எடுக்கும் முடிவும் மனதில் நிற்கிறது.
படத்தின் பெரும்பகுதி ஜெயில், அந்த கிராமத்தில் நடக்கிறது. அதை அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளளர் பன்னீர்செல்வம், தர்புகாசிவாவின் பாரதிதாசன் பாட்டு, இசை சிறப்பு. இந்த கதையுடன் இன்னொரு கதையை இணைத்து அதில் ஒரு தீர்வு சொல்லியிருப்பது புத்திசாலிதனம். இந்த படத்தால் நம் நாட்டுக்கு துாக்குதண்டனை தேவையா என்ற விவாதங்கள் எழுலாம். என்ன, படம் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. இது வழக்கமான கமர்ஷியல் படம் அல்ல.
ஐ, நோபடி
பேங்க் கொள்ளை பின்னணியில் வந்திருக்கும் படம். ஆனால், இந்த படத்தில் கொள்ளையுடன் குடும்பம், குழந்தை கடத்ததில், கணவன், மனைவி பிரச்னையை எமோஷனலாக சேர்த்து, இரண்டையும் கடைசியில் ஒரு புள்ளியில் இணைகிறார் இயக்குனர் நிசாம்பஷீர். இது தவிர கடைசியில் அரசியலும் இணைகிறது.

அரசு அதிகாரியான பிருத்விராஜ், பார்வதி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள், அவர்கள் குடும்ப வாழ்வில் விரிசல், டைவர்ஸ் வரை போகும் நிலை. அந்த சமயத்தில் ஒரு பேங்கில் கொள்ளை நடக்க, அங்கே இருக்கும் பிருத்விராஜை பயணக்கைதியாக்கி கொள்ளையர்கள் கொண்டு செல்கிறார்கள். அப்போது கொள்ளையர்கள் இறக்க, பிருத்விராஜ் தப்பிக்க அந்த 17 கோடி பணம் எங்கே என போலீஸ் தேடுகிறது. பிருத்விராஜை சந்தேகப்படுகிறது. அந்த சமயத்தில் பிருத்விராஜ் மகள் கடத்தப்பட, அந்த வழக்கு சூடுபிடிக்கிறது. அவர் குடும்பத்திலும் விரிசல் வெடிக்கிறது. கொள்ளையடித்த பணம் எங்கே? மகளை கடத்தியது யார்? பிருத்விராஜ், பார்வதி பிரிந்தார்களா என்பது கிளைமாக்ஸ் பேங்க் கொள்ளை நடக்கும் காட்சிகள், பிருத்விராஜை விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் செய்வது, அந்த ஊர்க்காரர்கள் அவரை சந்தேகப்பட்டு காயப்படுத்துவது, மகள் கடத்தல், அடுத்து நடக்கும் திருப்பங்கள், கிளைமாக்சில் இன்னொரு டுவிஸ்ட் என படம் வேகமாக செல்கிறது. ஆனால், திரைக்கதை மெதுவாக நகரும் பீலிங். அந்த கேரக்டர் தன்மை உணர்ந்து அதிகம் பேசாமல் அருமையாக நடித்து இருக்கிறார் பிருத்விராஜ்.
முதற்பாதியை விட, அடுத்த பாதியில் ஆக் ஷன், திட்டம், கோபம் என மிரட்டியிருக்கிறார். அவர் மனைவியாகவரும் பார்வதி, பிருத்விராஜ்க்கு உதவும் அசோகன், போலீஸ் ஷாஜகான், முதல்வர் விஜயராகவன் என எல்லாரும் சரியான தேர்வு. ஒரு கட்டத்தில் விசாரணை சம்பந்தப்பட்ட சீன் போரடிக்கிறது. இதில் என்ன சொல்ல வருகிறார்கள். பணம் எங்கே என நமக்கும் அலுப்பு வருகிறது. ஆனால், கிளைமாக்ஸ், அதற்கு முன்பு பல திருப்பங்கள் நடக்கின்றன. மீடியா, சோஷியல்மீடியா பிருத்விராஜைதுரத்துவது, இந்த பிரச்னை தனக்கு சாதகமாக எடுத்து, சில விஷயங்கள் முதல்வர் செய்வது ஆகியவை கதையை துாக்கிபிடித்துபரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியல், பிரஸ்மீட், முதல்வர் சம்பந்தப்பட்ட சீன்கள் சூப்பர். கிளைமாக்சில் வங்கி கொள்ளையை விடுத்து, குடும்பம், மனஸ்தாபம், குழந்தைகள் மனநிலை, ஈகோ என பலவிஷயங்களை சொல்லி, அட, நல்ல படம் என பெயர் வாங்க வைக்கிறார் இயக்குனர். ஒரு சின்ன கதையை, நல்ல கதையாக, திரில்லர் கலந்த பேமிலி கதையாகவும் சொல்லியிருக்கிறார்கள். மலையாள படங்களை விரும்புகிறவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
ராவ்பகதுார்
வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் சத்யதேவ் நடிப்பில் வந்திருக்கும் மன்னர் பரம்பரை கதை. 1960, 1990 கால கட்டத்தில் நடக்கும் சைக்கலாஜிகல் திரில்லர் கலந்த பேன்டசி கதை. இதில் உளவியல் பிரச்னை, காமெடி, சாதி, ஆசை, சந்தேகம் என பல கருத்துகளை சேர்த்து புது மாதிரி படமாக கொடுத்து இ ருக்கிறார்கள். வசதியான மன்னர் பரம்பரையை சேர்ந்த ஹீரோ சத்ய தேவ் வயதான வாழ்க்கை, மனநிலை பிரச்னை, அவரின் சின்ன வயது, அவரின் சந்தேகம், நட்பு, காதல் என பல விஷயங்களை, புது கோணத்தில் படம் சொல்கிறது. அதை சீரியசாக சொல்லாமல் கொஞ்சம் கிண்டல் பாணியில் சொல்வது ரசிக்க வைக்கிறது.

ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கேரக்டரில் அரச வாரியாக வரும் சத்ய தேவ், முழு படத்தையும் தன் நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார். இளமை மற்றும் முதுமை என இரண்டு வெவ்வேறு தோற்றங்களை நடிப்பில், மேக்கப்பில், காஸ்ட்யூமில், பாடிலாங்குவேஜ், டயலாக்கில் கலக்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் சேட்டைகள் நமக்கு பிடித்து போகிறது. தீபா தாமஸ் உடனான காதல் மற்றும் கல்யாணம், தன் இளைய மகன் மீதான அவரது வெறுப்பு ஆகியவற்றை குடியாத்தம் பின்னணியில் பிரீயட் படமாக சொல்லியிருக்கிறார். சாதி மற்றும் நிற வெறிக்கும் எதிரான கருத்து இருப்பது ஆச்சரியம். அவரின் சந்தேகம், பயம், கேள்விகளை ஒட்டியே திரைக்கதைஇருக்கிறது. சில பேன்டசி விஷயங்கள், பிளாஷ்பேக் காட்சிகள் சில சமயம் ரசிக்க வைக்கிறது. சில சமயம் குழப்புகிறது. ஹீரோ நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா, ஹீரோயின் தீபா தாமஸ் ஆகியோரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். அந்த அரண்மனை, செட்டுக்காக ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், இசையமைப்பாளர் ஸ்மரன் சாய், கலை இயக்குநர் ரோஹன் சிங்கை பாராட்டலாம். கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா. படத்தின் நீளம் அதிகம். கொஞ்சம் புரியாத கோணம், அதீத நடிப்பு என குறைகள் இருந்தாலும், ஒரு மாறுபட்ட கதையை , மாறுபட்ட ஆங்கிளில் சொல்லும் , தரமான படைப்பு.
முதற்கனல்
போதை மருத்து கலாச்சாரத்தால் மாணவர்கள், இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பத்துக்கு என்ன பிரச்னை வருகிறது என்பது கரு. இப்படி சிக்கிய ஹீரோ அஸ்வின் விஸ்வநாத் மீண்டானா என்ற கோணத்தில் நகரும் கதை முதற்கனல். ஆர்.வெங்கடரமணன் இயக்கி இருக்கிறார். சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவனான அஸ்வின் விஸ்வநாத் போதைக்கு அடிமை யாவது, எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுக்கு என்ன நடக்கிறது என்பதை விழிப்புணர்வு கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விஸ்வநாத், மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, கோபம், குற்ற உணர்ச்சி என அனைத்துவிதமான உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, ஹரிஹரன், யோகேஷ், ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் பலர் நடித்து இருக்கிறார்கள். போதையின் பாதையில் சிக்கி தவிக்கும் இளைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோர்கள், நண்பர்களுக்கும் இது விழிப்புணர் பாடம். டாக்டர் ஆக நினைக்கும் இளைஞன் போதையில் தடம் மாறுவது, ஒரு கொலை குற்றத்தில் சிக்கி தவிப்பது, போதையால் பலரின் பாதை தவறாக முடிவது ஆகியவற்றை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்லியிருப்பது பிளஸ்.
சிறப்பு செய்தியாளர்: ‘மீனாட்சிசுந்தரம்’




