“எதிர்மறை விமர்சனங்களை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்” – கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா கருத்து!

கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்கள் வர துவங்கி விட்டதாகவும், படத்தில் பாராட்ட கூடிய விஷயங்களை அனைவரும் மறந்துவிட்டதாகவும் நடிகை ஜோதிகா இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த நவம்பர் 14-ம்…

“I was shocked to see the negative reviews” - Actress Jyothika's comments on the movie Ganguava!

கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்கள் வர துவங்கி விட்டதாகவும், படத்தில் பாராட்ட கூடிய விஷயங்களை அனைவரும் மறந்துவிட்டதாகவும் நடிகை ஜோதிகா இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 14-ம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது. இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் பலரும் இப்படத்தை எதிர்மறையாக விமர்சித்தும் (Troll) வருகின்றனர்.

இதனை குறிப்பிட்டு, சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“நான் சூர்யாவின் மனைவியாக இந்த பதிவை எழுதவில்லை. ஒரு சினிமா விரும்பியாக இதனை பதிவிடுகிறேன். கங்குவா நல்ல திரைப்படம். சூர்யாவின் உழைப்பு குறித்து நான் பெருமைப்படுகிறேன். நிச்சயமாக முதல் அரை மணி நேரம் படத்தின் சத்தம் அதிகமாக இருந்தது. அதனை நானே குறையாக கூறுவேன். பெரும்பாலான இந்திய சினிமாக்களில் சில குறைகள் இருக்க தான் செய்கிறது. அது தவிர்க்க முடியாதது. குறிப்பாக இப்படியான ஒரு வித்தியாசமான கதைகளை திரைப்படத்தில் இந்த குறை இருக்கும்.

ஆனால், அது மூன்று மணிநேரமும் இருக்காது. படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருந்தார். அதே நேரம், சில எதிர்மறை விமர்சனங்களை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன். பெரிய படங்களில் கூட இரட்டை அர்த்த வசனங்கள், பழைய கதை, பெண்களை வேறு மாதிரி சித்தரிப்பது, அதிகப்படியான சண்டை காட்சிகள் இருந்துள்ளன. ஆனால் கங்குவா அப்படி இல்லை. கங்குவாவில் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதனை விமர்சனம் செய்யும் அனைவரும் மறந்து விட்டனர்.

முதல் நாளிலிருந்தே எதிர்மறை விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. அதுவும் முதல் காட்சி முடியும் முன்னரே எதிர்மறை விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. நிச்சயமாக இப்படத்தின் மையக் கருத்தும் அதற்காக படக்குழு உழைத்த உழைப்பும் பாராட்ட கூடியதே. கங்குவா திரைப்படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்களது உழைப்பு சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.