”தமிழ் கலாச்சாரத்தை பார்த்து தான் தமிழைக் கற்றேன்“ – சீனப் பெண் நிலானி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

”தமிழ் கலாச்சாரத்தை பார்த்து தான் தமிழை கற்றேன் “ என தமிழ் வானொலி அறிவிப்பாளரான சீனப் பெண் நிலானி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள…

”தமிழ் கலாச்சாரத்தை பார்த்து தான் தமிழை கற்றேன் “ என தமிழ் வானொலி அறிவிப்பாளரான சீனப் பெண் நிலானி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.  இரண்டாம் நாள் நிகழ்வில் மலேசியா நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராகிம், அமைச்சர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் சரவணன், கி வீரமணி, வைகைச்செல்வன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம். மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை தாம் ஊக்குவிப்பதாகவும், பள்ளிகளில் தமிழை கூடுதல் மொழியாக மாற்ற முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைக்கு கூடுதலாக 20 லட்சம் வெள்ளியை வழங்குவதாகவும், தமிழ் ஆய்வுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதுடன், சிறந்த படைப்புகளை மொழி பெயர்க்க அது பயன்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சீன வானொலியின் தமிழ் அறிவிப்பாளராக உள்ள நிலானி கலந்து கொண்டார். சீன வானொலி தமிழ்ப் பிரிவு அறிவிப்பாளராக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள சீனப் பெண் நிலானி, மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் நியூஸ் 7 தமிழின் இணை ஆசிரியர் தேவா இக்னேசியஸிற்கு  சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது..

”தமிழர்களின் உடைகள், சேலை ஆகியவற்றை பார்த்து தமிழ் கலாச்சாரத்தை விரும்பி தமிழ் மொழியை கற்றேன். தமிழ் மொழியை கஷ்டப்பட்டே முயற்சி செய்து அதனை பயிற்சி செய்து கற்றேன்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று நினைத்து நான் தமிழ் மொழியை கற்கவில்லை. தமிழ்  கலாச்சாரத்தை பார்த்தே தமிழ் மொழியைக் கற்றேன். தமிழ் மொழியை என் தாய்மொழியான சீன மொழியைப் போலவே எண்ணுகிறேன்

தமிழ் மக்களிடம் இப்படி அன்பும், ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. தற்போது தமிழ் மொழியை கற்றதால் தமிழ்ப் பாடல்களை அதிகம் கேட்கிறேன்” என சீனப் பெண்மணி நிலானி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.