சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: அக்.11-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி, 11-ம் தேதி நடைபெறுவதாக விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளனர். சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் சதி…

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி, 11-ம் தேதி நடைபெறுவதாக விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளனர்.

சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தன. பின்னர் இதில், திமுக தோழமை கட்சிகளும் பங்கேற்பதாக தெரிவித்ததால் இது சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியாக மாறியது.

இந்நிலையில், அக்டோபர் 2-ம் தேதி (நாளை) சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் நாளை மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, 11-ம்தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சி மற்றும் மக்கள் இயக்கங்களுடன் பேசி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் வருகிற 11 ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதுமான இந்த மனிதச் சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.