தாய் நிலம்:
அபிலாஷ் ஜி தேவ் இயக்கத்தில் அமர் ராமசந்திரன், நேஹா நடித்த அப்பா, மகள் பாசக்கதை. ஈழத்து பின்னணியில் நடக்கிறது . 1980களில் இலங்கை போரில், தமிழகத்தை சேர்ந்த டாக்டரான தனது மனைவியை பறிகொடுக்கிறார் அமர் ராமச்சந்திரன். தங்களது ஒரே மகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வருகிறார். மனைவியின் சகோதரி வீட்டில் அடைக்கலம் தேடி செல்ல, அங்கே அவமானமே மிஞ்சுகிறது. இலங்கை அகதியாக நெல்லை அருகே ரோட்டோரத்தில் மகளுடன் வசிக்கிறார். அங்கே பெட்டி கடை வைத்திருக்கும் பாலாசிங், பக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். கையில் இருக்கும் பணம் காலியாக வேலை தேடுகிறார். மகள் வசதியாக இருக்க வீடு தேடுகிறார். மகள் படிக்க பள்ளி தேடுகிறார். அகதியான அவருக்கு இதெல்லாம் கிடைத்ததா? அவர்கள் வாழ்வில் நடந்த துயரம் என்ன? அதை அடுத்து மகள் என்ன முடிவெடுக்கிறார் என்பது தாய் நிலம் கதை.
அப்பாவாக அமர் ராமசந்திரனும், மகளாக நேஹாவும் இலங்கை தமிழ் பேசி, அகதியின் வலி, வேதனையுடன் அந்த கேரக்டர் ஆகவே மாறி நடித்து இருக்கிறார்கள். அப்பா மகள் பாசமே கரு. அதை சிறப்பாக நடிப்பில் கொண்டு வந்து இருக்கிறார்கள். இருவருக்குமான பாசம், சூழ் நிலை, கனவு, பிரச்னைகள் மனதை உலுக்குகிறது. மகளுக்காக கஷ்டப்படும் அமரின் நடிப்பு, செயல் சில சமயம் கண் கலங்க வைக்கிறது. அப்பாவாக கதை சொல்வது, கண்டிப்பது, மழைக்கு பயப்படுவது ஆகியவை டச்சிங் சீன்கள்.அவர் நடிப்பு பிளஸ் இலங்கை, நெல்லை கதைக்களத்தை தத்ரூபமாக காண்பிக்கிறது பிரசாந்த் கேமரா. அவுசேப்பச்சன் இசை கதைக்கு வலு சேர்க்கிறது. சிறுமி நேகா நடிப்பு,அவரின் ஆசை, கிளைமாக்சில் ஒரு முடிவெடுத்து செயல்படுத்துவது மனதில் நிற்கிறது. நம் இனம் அழக்கூடாது என முக்கியமான இடங்களில் டயலாக் பேசுகிறார் அமர். அது வலிமையான வரிகள்.
மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் எடுத்த முக்கியமான தமிழ் படம். கதையில் நடிப்பில், ஈழ தமிழர்கள் குறித்த பார்வையில் ஆழம் இருக்கிறது. கிளைமாக்சை இன்னும் வலுவாக, வேறு கோணத்தில் எடுத்து இருக்கலாம். சில சீன்கள் மெதுவாக நகர்வதும் மைனஸ். மகள்களை பெற்ற அப்பாக்கள், அப்பா பாசத்தில் இருக்கும் மகள்கள், ஈழத்து தமிழர்கள், அவர்கள் மீது அன்பு கொண்டவர்களுக்கு தாய் நிலம் ரொம்ப பிடிக்கும்.

பருந்து:
மதுரை அருகே வசிக்கும் மாரிமுத்து, சர்மிளா தம்பதியினர் இளைய மகள், காதல் வயப்பட்டு டிரைவருடன் ஓடிப்போகிறார்.அதுவும் அக்கா திருமணம் நடக்கிற நிலையில்…ஊர் பெரியவர் ஆன கதை நாயகன் அழகுமலையிடம் பஞ்சாயத்து வருகிறது. என் மகளை எப்படியாவது கண்டு பிடிக்கணும் என மாரிமுத்து கலங்குகிறார். அழகுமலை, அவர் தம்பி விநாயக் ஆகியோர் அந்த காதல் ஜோடியை தேடுகிறார்கள். அந்த பெண்ணின் தாய் மாமா மன்சூர் அலிகானும் வலை வீசி தேடுகிறார். வெளியூரில் தலைமறைவாக இருக்கிறது காதல் ஜோடி என்ன நடந்தது என்பது பருந்து கதை.
காதல் கதைகளில் இது வித்தியாசமானது. காதலை விட, பெற்றோர்கள், குடும்பம் எதிர்காலம் முக்கியம் என இயக்குனரும், ஹீரோவுமான அழகுமலை அடித்து சொல்கிறார்..அவர் இயல்பான நடிப்பு, சண்டை ஓகே. அவர் தம்பியாக வருகிற விநாயக் எனர்ஜி ஆக இருக்கிறார், போலீஸ் சர்மிஸாவை காதலிக்கிறார். ஒரு கலர்புல் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். சர்மிஸா சில சீன்களில் வந்தாலும் நடிப்பில் அழகில் ஜொலிக்கிறார். மன்சூர் அலிகான் தன் பாணியில் காமெடி கலந்த வில்லத்தனம், சண்டை செய்கிறார். பரபரப்பான ஒரு காட்சியில் வக்கீலாக வருகிறார் இயக்குனர் பேரரசு. சென்ட்ராயன், அப்புக்குட்டி காமெடி பண்ண முயற்சித்து இருக்கிறார்கள்.
காதல், துரத்தல், சண்டை , காமெடி, செண்டிமெண்ட் என படம் செல்கிறது. புதுமுகங்கள் நடிப்பு, பட்ஜெட் காரணமாக அதில் தொய்வும் இருக்கிறது. காதலை புது கோணத்தில் சொன்னதில் மட்டும் பருந்து கவனம் பெறுகிறது.

ஈ 1:
ஈ1 படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கி, நடித்தவர் சதா நாடார், மோனிகா செலினா கதை நாயகி. இவர்கள் இருவரும் நிஜ கணவன்,மனைவி. இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இவர்களை தவிர நண்பராக பாண்டி, குழந்தை நட்சத்திரமாக பேபிஷிவ், வில்லன் ஆக சுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். குழந்தையுடன் மோனிகா செலினா இருக்கும் அபார்ட்மெண்ட்டில் அத்துமீறி நுழைகிறார் சதா. அது ஏன்? அங்கே என்ன நடக்கிறது. அவருக்கு என்ன நடந்தது. யாரை பழிவாங்குகிறார் என்ற கோணத்தில் கதை செல்கிறது.
குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் பிரச்னை, தண்டனை என முக்கியமான விஷயத்தை படம் பேசுகிறது. அதற்கேற்ப சதா, மோனிகா நடிப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் அதிரடியாக இருக்கிறது சதா நடிப்பு. பின்னர் அதற்கான காரணம் சொல்லும் போது மனதை கவர்கிறார்..ஆள் இல்லாத வீட்டில் தவிப்பவராக மோனிகா நடிப்பும் ஓகே. திரில்லர் படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சஸ்பென்ஸ். ஜான்சன் இசை, மனோ ஒளிப்பதிவு கதைக்கு செட் ஆகி இருக்கிறது. சில குறைகள் இருந்தாலும் பாலியல் குற்றங்களுக்கு தன் பாணியில் கடுமையான தீர்வு சொல்லி இருக்கிறார் இயக்குனர். 75 நிமிடத்தில் படம் முடிந்து விடுகிறது.

ஆல்பாஸ்:
ஜெயபிரகாஷ், சுப்ரமணிய சிவா, பிரசன்னா ஆகியோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகன்கள் 5 கோடி பணத்தை எடுத்து வருகிறார்கள். அது எம்.எல்.ஏ சரத்லோகுக்கு சொந்தமானது. பணத்தை திருப்பி கொடுக்கலாம் என ஜெயபிரகாஷ் சொல்ல, வீட்டில் இருக்கும் மனைவிகளான செந்தி, மோகனா, வினோதினி அதை தடுக்கிறார்கள். என்ன நடக்கிறது. எம்.எல்.ஏவிடம் பணம் சிக்கியதா என்பதே மைதீன் இயக்கிய ஆல்பாஸ் கதை.
கஷ்டத்தில் இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டுமா? கூடாதா என்ற கேள்வியை படம் கேட்கிறது. ஜெயபிரகாஷ் நடிப்பு நச். சுப்ரமணிய சிவா, பிரசன்னாவும் போட்டி போட்டு நடத்து இருக்கிறார்கள். மனைவிகளாக வரும் செந்தி, வினோதினி, மோகனா கேரக்டர் நடுத்தர குடும்ப பிரச்னை, ஆசை, ஏக்கத்தை எதிரொலிக்கிறது.
இதற்கிடையில் துஷ்யந்த், பிக்பாஸ் ஜனனி காதலும் கதையில் வருகிறது. வட சென்னை பின்னணியில் மாறுபட்ட படம். ஜேம்ஸ்வசந்தன் இசை உயிரோட்டமாக உள்ளது. கருப்பு பணம், எளிய மக்கள் வாழ்வியலை, திரில்லர் பாணியில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். முதற்பாதி வேகம் பிற்பாதியில் தடுமாறி இருக்கிறது. பெரியவர்கள், சிறுவர்கள், காதலர்கள், வில்லன், போலீஸ், கவுன்சிலர் என படத்தில் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். வழக்கமான காதல், அரசியல்,வன்முறை இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது நடுத்தர குடும்பம், பணம், பிரச்னை, தீர்வு என திரைக்கதையை நேர்த்தி ஆக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் மைதீன்.

இந்த படங்கள் தவிர 96, வல்லவன் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்.




