எப்படி இருக்கு THE POPE’S EXORCIST.? – திரைவிமர்சனம்

THE POPE’S EXORCIST திரைப்படம் பாதிரியார் அமோர்த் தனது நிஜ வாழ்க்கையில் பேயோட்டிய அனுபவத்தை பற்றி எழுதிய “ஆன் எக்ஸார்சிஸ்ட் டெல்ஸ் ஹிஸ் ஸ்டோரி (An Exorcist Tells His Story)”; மற்றும், “ஆன்…

THE POPE’S EXORCIST திரைப்படம் பாதிரியார் அமோர்த் தனது நிஜ வாழ்க்கையில் பேயோட்டிய அனுபவத்தை பற்றி எழுதிய “ஆன் எக்ஸார்சிஸ்ட் டெல்ஸ் ஹிஸ் ஸ்டோரி (An Exorcist Tells His Story)”; மற்றும், “ஆன் எக்ஸார்சிஸ்ட்: மோர் ஸ்டோரீஸ் ஆஃப் ஃபாதர் கேப்ரியல் அமோர்த் (An Exorcist: More Stories by Father. Gabriele Amorth)” ஆகிய இரண்டு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜூலியஸ் ஏவரி இயக்கியுள்ளார். காலித் மொஹ்தாசெப் ஒளிப்பதிவுடன், ஜெட் குர்செல் இசையில், சோனி பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் பாதிரியராக ஆஸ்கார் விருது வென்ற ரஸல் க்ரோவ் நடித்துள்ளார். இது, அவரது முதல் திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் வேட்டைக்காரன் என்று போற்றப்பட்ட பாதிரியார் கேப்ரியல், 36 ஆண்டுகளாகத் தேவாலயத்திற்காக ஆயிரக்கணக்கான பேயோட்டுதல்களை நடத்தியுள்ளார். பேய் பிடிக்கப்பட்ட ஓர் சிறுவனை காப்பாற்றும் பொறுப்பு பாதிரியார் கேப்ரியலிடம் வருகிறது. திகிலூட்டும் அந்த வழக்கு, பல நூற்றாண்டுகளாக வத்திக்கான் பேராலயத்தால் மறைக்கப்பட்டு வரும் ரகசியத்திற்கு இட்டுச் செல்கிறது.

பாதிரியார் கேப்ரியல் வத்திக்கானின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியத்தின் பின்னால் உள்ள உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். கதையின் ஓட்டத்தில், பல ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான விஷயங்கள் தோன்றுவதோடு மட்டுமல்லாமல், அதன் வீரியம் பெருகிய வண்ணம் உள்ளது. முக்கியமாக குழந்தை நடிகர் பீட்டர் டெசௌசா ஒரு பக்கம் அப்பாவி சிறுவனாக இன்னோரு பக்கம் ஓர் அரக்கனாக தனது எதார்த்த நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று நடிகர்கள் – டேனியல் சோவாட்டோ, கேரி மன்ரோ, அலெக்ஸ் எஸ்ஸோ மற்றும் பிராங்கோ நீரோ ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தக்க வலுவைச் சேர்க்கின்றனர்.

படத்தில் திகிலூட்டும் காட்சிகள் ஒன்று கூட இல்லை என்பதால் இது பேய் படத்தை பார்ப்பது போன்ற அனுபவத்தை தராது. இக்கதையில் வெளிப்படையான விஷயங்கள் விரிவுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்கு மதிப்பிற்காக மாற்றப்பட்டுள்ளன. இப்படம் “தி எக்ஸார்சிஸ்ட் (1973)” திரைப்படம் போன்று இல்லை, ஆனால் இது நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படம். ஒரு நொடி கூட சலிப்பு ஏற்படவில்லை நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.