ஒரு வேளை உணவு வழங்கியதற்காக ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வருகிறது குரங்கு ஒன்று.
சிலநேரங்களில் விலங்குகளிடமிருந்து வெளிபடும் குழந்தை தனமான நன்றியுணர்வு, நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி விடும். அப்படி, ஒரே ஒரு முறை உணவு வழங்கியதற்காக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, பிரிய மனமில்லாத குரங்கு ஒன்று, பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. அவரை விடாமல் சுற்றி வருதால், சவாரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேவரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி. இவர், தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஸ்டாண்டில் ரவி நின்று கொண்டிருந்தபோது, குரங்கு ஒன்று ஆட்டோவிற்குள் நுழைந்துள்ளது. அதை பார்த்து பரிதாபப்பட்ட அவர், அங்குள்ள கடைக்கு சென்று பழங்கள், திண்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
அவற்றை சாப்பிட்ட குரங்கு, ஆட்டோவிலே அமர்ந்து கொண்டது. சவாரி செல்லும் நேரத்தில் அந்த குரங்கை விரட்டியுள்ளார் ரவி. எனினும், அந்த குரங்கு ஆட்டோவிலிருந்து இறங்கி, ஓட்டுநர் சீட்டில் இருந்த ரவியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டது. ரவி எவ்வளவு முயற்சி செய்தும், குரங்கை விரட்ட முடியவில்லை. இறுதியாக குரங்குடன்தான் சவாரிக்கு சென்றுள்ளார். தன்னை விட்டு பிரியாத குரங்கால், சவாரி ஏதும் கிடைக்காமலும் அவதிப்பட்டுள்ளார்.
பின்னர் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் நடந்த விவரங்களை கூறி, அந்த குரங்கை ஒப்படைக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த குரங்கு குழந்தையைப் போல் ரவியை அணைத்துக்கொண்டு போகமாட்டேன் என அடம்பிடித்துள்ளது. ஒரு வழியாக வனத்துறை அதிகாரிகளிடம் அந்த குரங்கை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அங்கிருந்து தப்பித்த குரங்கு, ஆட்டோ ஸ்டாண்டில் ரவியை தேடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் அங்கிருப்பவர்கள். குரங்கால் சவாரி கிடைக்காததால் ரவி வேறு இடத்தில் நின்று சவாரி ஓட்டி வருகிறார். ஒரு வேளை உணவு வழங்கியதற்காக, பிரிய மனமில்லாமல் ரவிவை சுற்றி வரும் குரங்கின் செயல், பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.