”நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன!” – பிரதமர் மோடி பேட்டி

சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.…

சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்வோம். விநாயக பெருமானுக்கு ‘விக்னஹர்தா’ என்றும் பெயர், இனி நாட்டின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இருக்காது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறுகியதாக இருக்கலாம், ஆனால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது வரலாற்று முடிவுகள் எடுக்கப்பட உள்ள கூட்டத்தொடர். இந்த கூட்டத் தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டு கால பயணத்திலிருந்து புதிய இலக்கை நோக்கி செல்வதாகும்.

இது ஒரு குறுகிய அமர்வு. ஆயினும் மக்களவை உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். சந்திரயான்-3 விண்கலம் நமது மூவர்ண கொடியை நிலவில் நிலைநாட்டியுள்ளது. இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும்போது, அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ​​இந்த வெற்றியின் மூலம் பல வாய்ப்புகளும் சாத்தியங்களும் இந்தியாவின் கதவுகளைத் தட்டுகின்றன.

G20 மாநாடு வெற்றியின் மூலம் உலகளவில் தென்பிராந்தியத்தின் குரலாக இந்தியா மாறியுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நாளை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும். இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் சில நாட்களே நடந்தாலும், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இப்போது புதிய நாடாளுமன்றத்திலிருந்து பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் போது 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.இதற்காக வரும் காலத்தின் அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.