டிரம்ப் நலம்பெற இந்து சேனா அமைப்பினர் பூஜை!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் நலம் பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.  அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை…

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் நலம் பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை செய்துள்ளனர். 

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டிருந்த போது மர்மநபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த தாக்குதலில், முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் காதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞர் Thomas Matthew Crooks-ம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் டிரம்ப் உடல்நலம் பெற வேண்டும் என்றும், அவரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

டெல்லி தில்ஷாத் கார்டனில் உள்ள மா பக்லாமுகி சாந்தி பீடத்தில் இந்த பூஜையை நடத்தியுள்ளனர். மேலும் ட்ரம்பின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகவும், அவரைப் பாதுகாக்க தெய்வீக தலையீடு தேவை எனவும் இந்து சேனாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.