சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையத் தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு விதங்களில் இந்தி மொழியை திணிப்பதாக மத்திய அரசு மீது திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தி திணிப்பை எதிர்த்து அரசியல் கட்சியினர் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி திணிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளம், https://mausam.imd.gov.in/chennai/# அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையதின் வலைத்தளம் போல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரே நாடு ஒரே இணையதளம் என்ற அடிப்படையில் மாற்றி அமைப்பதாகவும் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
முழுவதுமாக தமிழில் இருந்த வலைத்தளத்தில் தற்போது தமிழ் உள்ள அளவிற்கு இந்தி மொழியிலும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தி மொழி திணிப்பு சர்ச்சைக்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையத்தள பக்கத்தில் இந்தியிலும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








