“மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் அரசுக்கு ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கான 144 ஆவணங்கள் சிக்கியுள்ளது. விசாரணை நடைபெற 3 மாத காலம் அவகாசம் தேவை” என ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்தனர். எனினும், மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் கூறியதைத் தொடர்ந்து அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக விசாரணை செய்ய கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கூறிய நிலையில், மனுவை திரும்பப் பெற அனுமதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரையைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், “மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு குறித்து பல புகார்கள் வந்துள்ளது. விசாரணையில் வாக்கி-டாக்கி வாங்கியதில் அரசுக்கு ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கான 144 ஆவணங்கள் சிக்கியுள்ளது. விசாரணை நடைபெற 3 மாத காலம் அவகாசம் தேவை என நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
எனினும், மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன், தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டினால் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு இதுதொடர்பாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டு, 3,100 வாக்கி-டாக்கிகள் வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர எல்லைப்பகுதிகளில் 3 தகவல் தொடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
சுமார் ரூ.37 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிக்கும்படி உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.








