முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் சினிமா

ஹீரோ to வில்லன் : வினய்யின் தமிழ் திரைப்பயண ரியாலிட்டி


ஜெனி

கட்டுரையாளர்

தனித்துவமான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் வினய் ராய். அழகான உடல் தோற்றம் கொண்டு சாக்லேட் பாயாகத் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். கோலிவுட்டில் கதாநாயகனாக நுழையும்போதே வெற்றிக்கனியை ருசித்தவர்.

இவரது முதல் தமிழ் திரைப்படமான ’உன்னாலே உன்னாலே’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்து, அவரை அடையாளப்படுத்தியது. இத்திரைப்படத்தில் இளைஞர்களின் மனநிலைக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்திப் பிரபலமானார். ஹாரிஸ் ஜெயராஜின் கவர்ச்சிகரமான இசையில் வெளியான ஜூன் போனால், உன்னாலே உன்னாலே, வைகாசி நிலாவே உள்ளிட்ட பாடல்களும் இத்திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் படத்தில் கதாநாயகனாக ஜொலித்த இவரால் அடுத்தடுத்த திரைப்படங்களில் கதாநாயகனாக வெற்றி பெற இயலவில்லை. ’உன்னாலே உன்னாலே’வைத் தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்த ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு ஆகிய திரைப்படங்கள் நினைத்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை. வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்த போதிலும் அவருக்கான வெற்றிப் பயணம் சற்று தொய்வடையத் தொடங்கியது. தமிழ் சினிமாவில் வினய்யின் முகம் மெல்ல மறையத் தொடங்கிய நேரத்தில் மீண்டும் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது ’என்றென்றும் புன்னகை’. ஜீவா, வினய் மற்றும் சந்தானத்தின் கூட்டணி, இப்படத்தின் மூலம் நண்பர்களுக்கிடையிலான உறவை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. இன்றும் நட்பு பற்றி அவர்கள் வைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களில் இத்திரைப்படத்தின் பகுதிகள் இடம்பெறத் தவறுவதில்லை.

ஆனால் ’என்றென்றும் புன்னகை’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவா இடம்பெற்றதால், ஹீரோவாக வினய்க்கு இப்படம் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றே கூறவேண்டும். துணை நடிகர் என்ற ஸ்தானமே அவருக்கு வழங்கப்பட்டது. மூவரின் கூட்டணி மற்றும் நகைச்சுவை இப்படத்தைத் தூக்கிப் பிடித்தது.சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்திலும் வினய் துணை நடிகராகவே இடம்பெற்றார். திகில் திரைப்படம் என்றாலும் சந்தானம், மனோபாலா, கோவை சரளா என நகைச்சுவைப் பட்டாளத்தின் நகைச்சுவைகளே அரண்மனை திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகின. மீண்டும் ஒரு திரைப்படத்தின் முன்னணி கதாநாயகனாக வினய்க்கு வரவேற்பு கிட்டவில்லை.

இன்றைய தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்றால் அந்த திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழும். காரணம் விஜய் சேதுபதியின் ஆக்ரோஷமான வில்லத்தனம். இவரும் தொடக்கத்தில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அப்படங்கள் இவரை அடையாளப்படுத்தவில்லை.

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, சிறந்த வில்லனுக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது. இதன்பின்னர் இவர் வில்லனாக நடித்த அனைத்து திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்.

நடிகர் விஜய் சேதுபதியைப் போலவே அருண் விஜய், பிரசன்னா, சிபிராஜ் ஆகியோரும் ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக நடித்து வரவேற்பைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் நடிகர் வினய் ராயும் கதாநாயகன் பாதை கைகொடுக்காத நிலையில் கதாநாயகனை எதிர்க்கும் வில்லன் பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் டெவில் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் வினய் நடித்திருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து தமிழ் திரையுலகிற்கு புதிய வில்லனை அறிமுகம் செய்தது. வினய்யின் வில்லத்தனம் அவரை அடையாளப்படுத்தியது.

தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் மூலம் தனது வில்லத்தனத்தை மெருகேற்றத் தொடங்கினார் வினய். தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை வில்லனாகக் கொண்டாடித் தீர்த்தனர். அவரது வில்லத்தனத்துக் கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. கதாநாயகனாக அவர் நடிப்பதைவிட வில்லனாக நடிப்பதையே அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

திரைத்துறை பலரது வாழ்க்கையையும் பாதையையும் பலவாறாக மாற்றியமைத்துள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வினய். ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி தந்து வில்லனாகப் புகழ்பெற்ற வினய், எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த போதிலும் தளராமல் தனக்கான பாதையைச் சீர்செய்துகொண்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

அவரது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் தெரிவித்து மகிழ்கின்றனர். வில்லனாக வாகை சூடிய வினையின் திரைப் பயணம் தொடர்ந்து வெற்றிகரமானதாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்

Arivazhagan Chinnasamy

அமெரிக்க ராணுவம் பதிலடி: காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பலி

Gayathri Venkatesan

சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

G SaravanaKumar