ஜெயிலர் படம் ரூ.600 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதேபோல் இரண்டாவது வார இறுதி நாள்களை கடக்கும் போது ஜெயிலர் திரைப்படம் மொத்தம் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, ஜெயிலர் படம் ரூ.600 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கியது. இதனிடையே ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சனரீதியாக பெரும் அடி வாங்கியது. 2.0, தர்பார் போன்ற படங்களுக்கும் இதே கதைதான். ‘பேட்ட’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதில் உண்மையான ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என ரசிகர்கள் கருதினர். இந்த குறையை எல்லாம் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் தீர்த்திருப்பதாக பலரும் விமர்சனம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







