சென்னையில் போலீஸ் போல் நடித்து தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் மூன்றர லட்ச ரூபாயை வழிபறி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சூளையில் உள்ள சிகேஎல் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் ராவ். இவர் அண்ணா நகர் ஏ பிளாக்கில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் எழும்பூர் பகுதிக்குச் சென்ற பிரபாகர் ராவ், அங்கிருந்த நிறுவன ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த மணி என்பவரிடம் இருந்து நிறுவனத்தின் கலெக்ஷன் தொகை மூன்றரை லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். பணத்துடன் அலுவலகம் திரும்பிய பிரபாகர் ராவ் அண்ணா நகர் 6வது பிரதான சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது, POLICE என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஒருசக்கர வாகனத்தில் எதிரே வந்த இருவர் அவரை வழிமறித்ததாக தெரிகிறது.
தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவரும், பிரபாகர் ராவிடம் எங்கிருந்து வருகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, உங்களை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். சோதனையில் பிரபாகர் ராவ் வைத்திருந்த மூன்றரை லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்ட அவர்கள், பணத்தை காவல் ஆணையர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு இருசக்கர வாகத்தில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. வந்தவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்த பிரபாகர் ராவ் உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். அப்போது போலீசார் மூலம் எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதையறிந்து அதிர்ச்சியடைந்த பிரபாகர் ராவ், சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் போலீஸ் போல நடித்து பணத்தை பறித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. 2022 ஆம் ஆண்டு அரும்பாக்கம் ஃபெட் பேங்க் கோல்ட் லோன் நிறுவனத்தில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான இருவருக்கும் தொடர்பிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வழக்கில் கைதான இருவரும் சமீபத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், போலீஸ் போல நடித்து தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் கைவரிசை காட்டியதும் அம்பலமானது. விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல பலரை இவர்கள் போலீஸ் போல் நடித்து ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த இருவர், போலீஸ் போல் நடித்து பணம் பறித்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







