‘அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன’ என்ற நா.முத்துக்குமாரின் வரிகளில் தொடங்குகிறது தந்தைக்கும் அவருக்குமான பிணைப்பு; அவரின் வரிகள் அவருக்கானது மட்டுமல்ல அனைவருக்கும் அவ்வரிகள் பொருந்தும். தாயை மட்டுமே கொண்டாடி வந்த சமூகத்தில் தகப்பனின் அன்பை ஆழமாக, அழுத்தமாக, அழுகையாக, கவிதையாக, பாடல்களாக படைத்ததில் நா.முத்துக்குமாரின் பங்கு அலப்பறியது.
தந்தையர் தினமான இன்று கூட அவரின் வரிகள் இல்லாத வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களையும், பேஸ்புக் போஸ்டுகளையும் பார்க்காமல் தந்தையர் தினத்தை கொண்டாட முடியாது எனலாம். ’என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்’ என்ற கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் வரிகளுக்கு பிறகு தந்தையரை கொண்டாடி தீர்த்து, ஒய்ந்த கவிஞன் நா.முத்துக்குமார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மழை, மேகம் என்று பாடல்கள் எழுதிய கவிஞர்கள் மத்தியில் ’மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூடவே ஒரு அழகே’ என்றும் ’வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’ என்ற தனித்துவமான வரிகளை கொண்டு தனக்கென முத்திரையை பதித்த அவர், தாயை பற்றி ஏராளமான பாடல்கள் வந்து கொண்டிருந்த வேளையில் தந்தையை பற்றிய பாடல்களை தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதித்த அன்பின் ஆதி ஊற்று ந.முத்துக்குமார்.
1981ல் வெளிவந்த மெளனகீதங்கள் படத்தில் வரும் ‘டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே’ என்ற பாடலுக்கு பிறகு தந்தையை பற்றி ஒரு சில பாடல்கள் வந்தாலும் பெரிதாக பேசப்படவில்லை.
சமாதானம், சமரசம், சரீரமாய் தாயின் அன்பை வெளிப்படுத்திய தமிழ் சினிமா கண்டிப்பு, கரார், கோபம், குடிகாரர், ஊதாரி என தந்தையரை வில்லன்களாகவே காண்பித்து வந்தது. 2000 தொடக்கத்திலிருந்து தந்தை பாசத்தை விளக்கும் விதமாக 7g ரெயின்போ காலனி, தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம், எம்டன் மகன், மாயாண்டி குடும்பத்தார்கள், தங்கமீன்கள், சிகரம் தொடு, என ஏராளமான படங்கள் வந்தன. படங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளை காட்டிலும் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமே அதிகம் எனலாம். அகராதியில் இருக்கும்போது சொற்கள் அடக்கமாகதான் உள்ளது ஆனால் அவை வெளிப்படும்போதுதான் வீரியமாக, வலியாக வெளிப்படுகிறது. ஆம் நா.முத்துக்குமாரும் தகப்பனுக்காக வார்க்கப்பட்ட வரிகளும் அவ்வாறே தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் வரும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என்ற வரியாகட்டும், திருடன் போலீஸ் படத்தில் வரும் ’தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே’ என்ற பாடலாகட்டும் தெய்வதிருமகள் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற பாடலாகட்டும், தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல்கள் என இவைகள்தான் இன்றைய தந்தையர் தினத்தின் கதாநாயகன். இவற்றை இளைய சமூகத்தினரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை காணும் போது , தந்தை இல்லாதவர்களுக்கு கண்ணீரையும் தந்தை இருப்பவர்களுக்கு அதீத அன்பை ஏற்படுத்துகிறதே என்றே கூறலாம்.
நடிகர் விஜய்சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் நான் சாதாரணமானவனாக இருக்கும்போது என் தந்தை என் உடன் இருந்தார். நான் நடிகனாக உயர்ந்ததை பார்க்க என் தந்தை என்னுடன் இல்லை என தெரிவித்தார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் நான் என் தந்தைக்கு செய்ததது ஒன்றே ஒன்று, நான் அவருக்கு கொள்ளி வைத்தது மட்டுமே என்றும் இல்லாதவர்களுக்குதான் தெரியும் இழப்பின் வலி என உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.
திடீரென்று ஒரு நாள் உங்கள் அப்பாவுக்கு
வயதாகிவிடுகிறது.…..
மேலும்
சமீபமாய் ஒரு பயம்…
உங்களைத்
துரத்திக்கொண்டுருக்கிறது…
உங்கள் அப்பாவுக்கு
வயதாவது என்பது
உங்கள் அப்பாவுக்கு மட்டும்
வயதாவதல்ல,
உங்களுக்கும்
வயதாகிறது என்பதே அது.
என்ற வாழும் மகன்களுக்கான வரிகளாட்டும் இன்னும் ஓர் ஜென்மம் மண்ணில் பிறப்பேனா… தந்தை அவன் விரலை தொட்டுப் பிடிப்பேனா. என்ற மரணித்த தந்தைக்கான வரிகளாகட்டும் நா.முத்துக்குமாரின் வரிகளை நினைக்காமல் தந்தையர் தினத்தை நிறைவு செய்ய முடியாது
ஒரு தினம் என வைத்து அன்றைய தினத்தை மட்டும் கொண்டாடுவதை நிறுத்தி, நித்தம் நித்தம் அப்பாக்களை நேசியுங்கள் கொண்டாடுங்கள் அம்மா என்பது என்பது அன்பின் மொழி என்றால் அப்பா என்பது அன்பின் வடிவம்.. அதன் அழுத்தம், அடர்த்தி வேறு எந்த சொல்லாலும் பூர்த்தி செய்ய இயலாது.