கவுகாத்தி-இந்தியாவின் 2வது விளையாட்டு தலைநகரம்

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக டெல்லி விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரம் விளையாட்டுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் முதல் ஒலிம்பிக் வரை சர்வதேச விளையாட்டு…

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக டெல்லி விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரம் விளையாட்டுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் முதல் ஒலிம்பிக் வரை சர்வதேச விளையாட்டு அரங்குகளில், இந்திய வீரர்களின் எழுச்சி ஆண்டுக்கு ஆண்டு வியப்பளிக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் அதிகம் பேர் கலந்துகொண்ட குழு இதுவாகவே பார்க்கப்பட்டது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த குழுவிலிருந்து இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களே கிடைத்தது என்றாலும், இந்திய வீரர் வீராங்கனைகளின் செயல்பாடு ஒலிம்பிக்கில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதற்கு காரணம் இந்திய வீரர்கள் பலர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் விளிம்பு வரை சென்று போராடி தோல்வியை சந்தித்தனர்.

தற்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில், 127 வீரர்கள் கொண்ட மிகப்பெரிய குழு இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளது.
ஒலிம்பிக் ஆரம்பித்த முதல் நாளன்றே பெண்கள் பளுதூக்குதல் போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதைத் தொடர்ந்து, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், குத்துச்சண்டை போட்டியில் லாவ்லினா போர்கோஹெய்னும் வெண்கலம் வென்று அசத்தினர்.

1980-ம் ஆண்டுக்கு பிறகு ஆடவர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி வெண்கலம் வென்று சாதனை படைத்தது. 41 ஆண்டுகளுக்கு பின், ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பதக்கம் வெல்லும் கனவை நிறைவேற்றியது இந்திய அணி. இதுவரை, டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கமும், 3 வெண்கலப் பதக்கம் இந்தியா வென்றுள்ளது.

இத்தகைய ஒரு பெரும் மாற்றத்திற்கு காரணம் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் விளையாட்டு போட்டிகளுக்காக ஏற்படுத்தி வரும் உட்கட்டமைப்புகளே ஆகும். குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் விளையாட்டு கூடங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், டெல்லி இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அசாம் மாநிலத்தின் தலைநகரம் கவுகாத்தி விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நகரமாக உருவெடுத்து இருக்கிறது.

கவுகாத்தியில் 2007ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலான தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதன் பின்னர், அந்த இடத்தில் உள்ளூர் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. தேசிய அளவிலான போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. கவுகாத்தியில் 9 வருட போராட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 2016ஆம் ஆண்டு மீண்டும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதுதான் கவுகாத்தியில் விளையாட்டுக்கு மறுவாழ்வு அளித்த நிகழ்வாகும். மேரி கோம், ஹிமா தாஸ் மற்றும் ஜமுனா போரோ போன்ற நட்சத்திர வீராங்கனைகளை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது அசாம்.

கவுகாத்தி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மையமாக பேசப்பபட்டு வருகிறது. இதற்கு அடித்தளமிட்டது, அதே ஆண்டில் டிசம்பர் மாதம் ஆண்களுக்கான முதல் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அங்கு நடைபெற்றதுதான். அக்டோபர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட 6-வது FIFA உலகக்கோப்பை போட்டிகளும், இந்தியா – ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டிகளும்தான், கவுகாத்தியை இந்தியாவின் அடுத்த விளையாட்டு மையமாக திகழ்வதற்கான தகுதியை அளித்தது என கூறலாம்.

அசாம் முதலமைச்சர் சோனோவால் கூறுகையில், கவுகாத்தியை இந்தியாவின் விளையாட்டு கேந்திரமாக மாற்ற, அசாமில் கிராமத்திற்கு 12 கோடி ரூபாய் என்றளவில் மாநிலத்தில் 26 ஆயிரம் கிராமங்களை தேர்ந்தெடுத்து விளையாட்டு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதற்காக, மொத்தம் ரூ.33,000 கோடியை செலவிட அசாம் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது, விளையாட்டு வீரர்களுக்கு பெரும் உற்சாகமளிப்பதாக உள்ளது. இதுபோன்ற அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால், கவுகாத்தி நாட்டின் 2-வது விளையாட்டு தலைநகரமாக உருவெடுத்து வருகிறது என கூறலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.