வயது மூப்பு காரணமாக காலமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர்.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சியின் சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் நேற்று (செப். 29) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், எம்.எஸ். சுவாமிநாதனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினர்.
மதியம் 12 மணிக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் தகன மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.. தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு 11.30 மணியளவில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது.







