தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்கிறார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.திமுக அரசு பதவியேற்றபின் நீட் பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரையின்படி நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் அந்த சிறப்பு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 13ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டு 2வது முறையாக நீட் விலக்குக்கு எதிராக சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக ஆளுநரை திரும்பபெற வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற நிலையில், மீண்டும் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் ஆளுநர் பயணத்தின் போது எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.







