இந்தியாவில் பள்ளிகளை தொடங்கியுள்ள கூகுள் நிறுவனம்

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான டூல்ஸ் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் பள்ளிகளை தொடங்க முடிவு எடுத்துள்ளது.   மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக மையமாக திகழும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் புதிய…

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான டூல்ஸ் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் பள்ளிகளை தொடங்க முடிவு எடுத்துள்ளது.

 

மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக மையமாக திகழும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் சேவையை மேம்படுத்த பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள கூகுள், இந்திய வர்த்தக சந்தையில் தனது இருப்பை நிலைநிறுத்த புதிய யுக்தியை தற்போது தொடங்கியுள்ளது.

 

பெருமளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கொண்டுள்ள இந்திய சந்தையில், அந்த நிறுவனங்களுக்கான பள்ளியை தொடங்கியுள்ளது கூகுள். வர்த்தக சந்தையின் அடிமட்டத்தை சேரும் வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட் அப் பள்ளியை தொடங்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 90 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொடங்கிய 5 ஆண்டிற்குள் தோல்வியில் முடிந்து வரும் சூழல் நிலவி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் மற்றும் டெக்னாலஜி தொடர்பான டூல்ஸ் குறித்த பயிற்சிகள் வழங்க கூகுள் முடிவு செய்துள்ளது. 9 வாரங்களை கொண்ட இந்த பயிற்சியில் கூகுள் நிறுவன மூத்த ஊழியர்களும் துறை சார்ந்த வல்லுனர்களும் பங்கேற்று பயிற்சிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஈ-காமர்ஸ், மொழி, சோஷியல் மீடியா, நெட்வொர்கிங் மற்றும் ஜாப் சர்ச் பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. உலகிலேயே மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சந்தையாக விளங்கும் இந்தியாவில் 70 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது என தெரிகிறது.

 

– சந்தோஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.