நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும், ஏலே என பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மணிகண்டன். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.
கடந்த 6 ஆண்டுகளாக திரைத்துறையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மணிகண்டனை திரையின் வழியே மக்களுக்கு அடையாளப்படுத்தியது ஜெய் பீம் ”ராசா கண்ணு” கதாபாத்திரமே. இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் நடிகர் மணிகண்டனின் நடிப்பு திறனை பலரும் பாராட்டி வந்தனர்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய ‘குட் நைட்’ படத்தில் ‘ மணிகண்டன் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். ‘முதல் நீ முடியும் நீ’ பிரபலம் மேத்தி ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குறட்டைப் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. சில திரையரங்குகளில் இன்னும் படம் ஓடிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், குட் நைட் படம் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








