நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படத்தில் அவர் நடித்த சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் எல்சியூ வின் குறியீடுகளை கண்டறிந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய்க்கு தந்தையாக நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பதாக இணையதளத்தில் பகிரப்பட்டு வந்தது. இன்று சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பரிசளிக்கும் பாணியில் லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் சூர்யா பேசும்போது மிகப்பெரிய கூட்டம் இருக்கும். அதேபோல சஞ்சய் தத் விடியோவிலும் ஒரு காட்சி இருப்பதாலும் மேலும் கழுகு இருக்கும் காட்சியும் காட்டப்படுகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ‘ஈகள் இஸ் கம்மிங்’ என்று ஒரு பாடல் இருக்கும். இதனால் இது நிச்சயமாக எல்சியூவில் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வருமென ரசிகர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.







