சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி, தரகர் மாலதி ஆகியோரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை மற்றும் ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குனர் பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவமனைக்கு நேற்று நேரடியாக சென்று ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நான்கு வார காலங்களுக்குள் நீங்கள் மேல்முறையிடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்த அறிவிப்பு அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்