Paytm நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் கவுதம் அதானி?

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக,  அதன் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் சர்மாவிடம் தொழிலதிபர் கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில்,  அதற்கு பேடிஎம் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின்…

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக,  அதன் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் சர்மாவிடம் தொழிலதிபர் கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில்,  அதற்கு பேடிஎம் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆன்லைன் வணிகம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.  இந்தியாவில் தற்போது ஆன்லைன் வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளில் முதன்மையாக விளங்கும் கூகுள் நிறுவனம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டது.

இதனிடையே,  பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க,  தொழிலதிபர் கவுதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் சர்மாவை,  அகமதாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது.

ஒன் 97 நிறுவனத்தின் சுமார் ரூ. 4,218 கோடி மதிப்புடைய 19% சதவீத பங்குகள் சேகர் சர்மா வசம் உள்ளது.  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் பேடிஎம் உருவாக்கி வைத்துள்ள வலுவான கட்டமைப்பை பின்டெக் துறையில் நுழைவதற்கான கச்சிதமான வழியாக அதானி குழுமம் கருதுகிறதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்த பேடிஎம் நிறுவனம், “இது தொடர்பாக நாங்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை” என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.