கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை; தனுஷ் 20

தந்தையின் கட்டாயத்தால் தமிழ் சினிமாவுக்கு வந்த தனுஷ்… சர்ச்சைகளை கடந்து சாதனை படைத்தது எப்படி…? தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, கடையில் வாங்கிய ஒரு புத்தகத்தில், தனது தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கதையை…

தந்தையின் கட்டாயத்தால் தமிழ் சினிமாவுக்கு வந்த தனுஷ்…

சர்ச்சைகளை கடந்து சாதனை படைத்தது எப்படி…?

தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, கடையில் வாங்கிய ஒரு புத்தகத்தில், தனது தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கதையை படிக்கிறார் செல்வராகவன். படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்த அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. இதனை படமாகவே எடுக்கலாமே என தந்தையிடம் கூறியிருக்கிறார் செல்வா. அதுவரை கிராமத்து கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த கஸ்தூரி ராஜாவுக்கு நகரத்து இளைஞர்கள் குறித்த கதை சரிப்பட்டு வருமா என தயக்கம். செல்வராகவன் கொடுத்த உந்துதலால், சரி படத்தை எடுத்துதான் பார்ப்போமே என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா.

கதையில் புதுமுகங்களையே நடிக்கவைப்பது என முடிவானதும் அதற்கான தேடுதலும் தொடங்கியது. ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திற்கான audition-ல் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோரை நடிக்க வைத்து பார்த்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அவருடைய இளைய மகனின் ஞாபகம் வந்திருக்கிறது. அவர் எந்த கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தாரோ, கிட்டத்தட்ட அதற்கு பொருத்தமான முகம் இளைய மகனுடையது. கையில் வெண்ணைய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்திருக்கிறோமே என்று எண்ணிய கஸ்தூரி ராஜா, 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தனது இளைய மகனின் கையை பிடித்து, சினிமாவின் பக்கம் அழைத்து வந்தார். சமையல் கலையில் பெரிய chef ஆகவேண்டும் என்று கனாக்கண்டு கொண்டிருந்த இளைஞனின் வாழ்க்கையில் அந்த நொடியே சினிமா நுழைந்து கொண்டது.

முதல் படம் வெளியானதுமே கடுமையான விமர்சனங்கள். இவனெல்லாம் ஹீரோவா? இந்த மூஞ்சிய பார்க்க, காசு செலவு செஞ்சு டிக்கெட் எடுத்து படம் பார்க்கணுமா? என்று கேலியும் கிண்டலும் அந்த இளைஞன் மீது பாய்ந்தன. ஆனால், அடுத்தப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தன்வயப்படுத்தினான் அந்த இளைஞன். அன்று வேகமெடுத்த நடிகரின் பயணம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் சம்பவம் செய்து, தமிழ்நாட்டை உலகரங்கில் புகழ்பெற வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர்தான் ரசிகர்களால் “நடிப்பு அசுரன்” என்றழைக்கப்படும் தனுஷ்.

தமிழ் சினிமாவில் இன்று தனுஷ் தொட்டிருக்கும் உச்சம் என்பது பலரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. தனுஷின் படங்களில் பெரும்பாலானவை கமர்ஷியல் ரீதியாக வசூல் செய்யும் படங்கள் என்றாலும், கருத்தியல் ரீதியாக விவாதத்தை உருவாக்கும் படங்களும் உண்டு. தனுஷ், செல்வராகவன் என தனது மகன்கள் இருவரும் சினிமாவிற்கே வரக்கூட்டாது, படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனாலும், சில சூழ்நிலைகளால் இரண்டு மகன்களுமே படத்திற்கு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பாட்டது. பள்ளி மாணவன் தனுஷுக்கோ சினிமாவின் மீது சிறிதும் நாட்டம் இல்லாமலேயே இருந்தது. தந்தையும், சகோதாரரும் வற்புறுத்தியதாலேயே, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு குழப்பங்களாலும், இன்னல்களினாலும் அவர்கள் எப்படி திசை மாறுகின்றனர் என்பதே “துள்ளுவதோ இளமை”யின் கதைக்களம். தனுஷுடன், ஷெரின் உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் முழுக்க முழுக்க கஸ்தூரி ராஜா, செல்வராகவன் ஆகியோரது வழிகாட்டுதலின் படியே தனுஷ் நடித்திருந்தார். 2002ல் படம் வெளியானதும் சர்ச்சைகளையும் சந்தித்தது.

படத்தில் அதிகம் adult content உள்ளதாகவும் அவை இளைஞர்கள் மனதை திசைமாற்றுவதாகவும், கஸ்தூரி ராஜா தன் மகன்களை வைத்தே இப்படி ஒரு படத்தை எடுப்பார் என்று நினைக்கவில்லை என மகளிர் சங்கத்தின் போர் கொடி தூக்கினர். சில இடங்களில் போராட்டம் நடந்தன. சென்னை woodlands திரையரங்கில் கற்கள் வீசப்பட்டன. தனுஷின் முதல் படமே பெரும் எதிர்ப்பை சந்தித்தது. முதல் படத்துடன் சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்தார் தனுஷ். ஆனால், சினிமா தனுஷை விடவில்லை. தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் தன்னுடைய அடுத்தப்படத்திற்கு தனுஷை ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய கஸ்தூரி ராஜாவை அணுகினார். மறுபுறம், செல்வராகவன், தான் இயக்கும் முதல் படத்தில் தனுஷையே கதாநாயகனாக்க முடிவு செய்தார்.

அந்த கதையை 4 ஆண்டுகளுக்கு முன்பே தனுஷிடம் கூறியிருந்தார் செல்வா. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த செல்வராகவன், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது தம்பி தனுஷிடம் கதை சொன்ன போது, தனது அறையில் நின்று தன்னையே அந்தப்படத்தின் நடிகராக நினைத்துக்கொண்டு நடித்துப்பார்த்தார் தனுஷ். ஆனால், அந்த படத்தில் நடிப்போம் என்று அவர் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால், அதுதான் நடந்தது. அந்த படம் தான் “காதல் கொண்டேன்”. தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ், சுதீப் ஆகியோர் நடிப்பில் உருவானது காதல் கொண்டேன். சிறுவயதில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஒரு இளைஞன், தனக்கு உதவும் பெண்ணை காதலியாக பாவிப்பதும், அவள் மீது காதல் கொள்வதுமே படத்தின் ஒன்லைன். இதனை பின்பற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் அச்சு அசலாக தனுஷ் பொருந்திப் போயிருந்தார். படம் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் செல்வராகவன் என்ற இயக்குநரை பற்றி பேச வைத்திருந்தது. தனுஷ் ஒரு நடிகராக தடம் பதிக்க தொடங்கினார். காதல் கொண்டேனை பொருத்தவரை ஹிட் என்றால் ஹிட் அப்படி ஒரு ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும்.

“காதல் கொண்டேன்” படப்பிடிப்பின் போது செட்டில் இருந்த மூத்த கலைஞர்கள் தனுஷை ஒரு நடிகனாக கூட ஏற்கவில்லை. இவனெல்லாம் ஒரு ஹீரோவா என்றே அங்கிருந்தவர்கள் எளனத்துடன் பார்த்தனர். இப்படிப்பட்ட அவமானங்களை எல்லாம் கடந்தே, தனுஷ் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அங்கிருந்த பலரும் அவரை கிண்டல் செய்ததை பின்னாளில் ஊடக பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்தார். ஆனால், அடுத்த ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம்நடிகர் என்ற இடத்தை எட்டி பிடித்தார் தனுஷ். அந்த படம்தான் “திருடா திருடி”. படித்துவிட்டு வேலைத்தேடும் நடுத்தர குடும்ப இளைஞன் வாசுவுக்கும் நாயகி சாயா சிங்குக்கும் இடையே ஏற்படும் மோதலே ஈகோவை கடந்து காதலில் முடிவதாக படம் உருவாக்கப்பட்டிருந்தது. வழக்கமான கதைதான் என்றாலும், கதை சொன்ன விதம், அதில் இடம்பெற்ற மன்மதராசா பாடல், கருணாசின் நகைச்சுவை ஆகியவை ரசிகர்களை கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் போன்ற நாயகத்தனத்தை வெளிப்படுத்தும் படங்களில் நடித்தாலும், அவை எதுவும் தனுஷுக்கு கை கொடுக்கவில்லை. குடும்பத்துக்காக பணம் சம்பாதிக்கவேண்டும் என்று சிங்கப்பூருக்கு சென்ற இளைஞன், அங்கு நடக்கும் சில சம்பவங்களால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட, அங்கிருந்து தப்பிக்க முயலும் பெண் ஒருவருக்கு உதவ முயல்வதும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே படமாக விரிந்தது. சுள்ளான் படத்திலோ, “பாக்கதான் சுள்ளான், சூடானா சுளுக்கெடுத்துடுவேன்” போன்ற வசனங்கள் பொருந்தாமல் போனது. இதேபோன்று பாலு மகேந்திர இயக்கத்தில் உருவான “அது ஒரு கனாக்காலம்” படமும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால்., இந்த பையனிடம் என்னமோ இருக்கு பாரேன் என்றே இயக்குநர்கள் தனுஷை கவனிக்க ஆரம்பித்திருந்தனர்.

 

சரியாக அந்த தருணத்தில் தான், தனுஷ் வாழ்க்கையில் புதுப்பேட்டை படத்தின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தினார் செல்வராகவன். “கதாநாயகன் ஒரு டான் என்று சொல்கிறீர்கள். என்னால் எப்படி அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியும்?” என்று தயக்கம் காட்டினார் தனுஷ். எழுத்தாளர் பாலகுமாரன் தலையிட்டு, “நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.” என்று நம்பிக்கையளிக்க கொக்கி குமாராக மாறினார் தனுஷ்.

 

தாயை இழந்த சிறுவன் ஒருவன், பசிப் பட்டினியாலும், தவறான நட்பாலும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு சுத்தும் கதாபாத்திரம் தனுஷுடையது. வட சென்னை மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, நேர்த்தியாக செல்வராகவன் எழுதி இயக்க நடிப்பால் அதற்கு உயிரூட்டினார் தனுஷ். 2006ம் ஆண்டு வெளியான இந்த படம் துவக்கத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து புதுப்பேட்டையை கொண்டாடி தீர்த்தனர் சினிமா ரசிகர்கள். இன்றளவும் புதுப்பேட்டையின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்கிற கேள்வி மேலோங்கியே நிற்கிறது. காதல் கொண்டேன் – புதுப்பேட்டை இடையிலான காலக்கட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் எதுவும் தனுஷுக்கு அமையவில்லை. அப்போதுதான், பூபதி பாண்டியன் இயக்கத்தில் “திருவிளையாடல் ஆரம்பம்” வியாபார ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

பல்சர் பைக் இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பதற்கு பொல்லாதவன் படமும் ஒரு காரணம் என்கிற அளவுக்கு அந்தப் படத்தில் பல்சர் பைக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதையையே ஒரு பைக்கில் இருந்துதான் வெற்றிமாறன் தொடங்கியிருந்தார். அந்த பைக் தன்னுடன் இருந்தவரை எல்லாம் சரியாக செல்வதாக நாயகன் உணருவதும், அது இல்லாமல் போனதும் அனைத்தும் தன்னை விட்டு விலகிச்செல்வதாக கருதுவதும் என இருவேறுபட்ட மனநிலையை பார்வையாளர்களுக்கு உருவாக்கினார் வெற்றிமாறன். 2007ம் ஆண்டு நவம்பரில் வெளியான பொல்லாதவன் விஜய்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான “அழகிய தமிழ் மகன்” படத்துடன் மோதியது. உண்மையில் இந்த ரேஸில் பொல்லாதவன் தான் வெற்றிபெற்றது. புதுப்பேட்டையைத் தொடர்ந்து பொல்லாதவனிலும் தனுஷின் சண்டை காட்சிகள் கவனம் ஈர்த்தது. இந்த படம் தான் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டது.

2008ல் வெளியான “யாரடி நீ மோகினி” 11 கோடியில் எடுக்கப்பட்டு 21 கோடி ரூபாய் வசூலித்தது. அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள், நாயகன் நாயகிக்கு இடையிலான மோதல் என கதையை எளிமையாக எழுதியிருந்தார் செல்வராகவன். இந்த கதையை அவர் முதலில் தெலுங்கில் தான் இயக்கியிருந்தார். இதன் பிறகே உரிய அனுமதி பெற்று, தமிழில் தனுஷ் நடிக்க மித்ரன் ஜவஹர் இயக்கினார். எங்கேயோ பார்த்த மயக்கம், ஒரு நாளைக்குள் எத்தனை கனவு, வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” உள்ளிட்ட பாடல்களை ரசிகர்களை கவர்ந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே நாயக பிம்பத்தை தூக்கி பிடிப்பவர்கள். தங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கிறதோ, அவர்களை தவிர பிற நடிகர்கள் மீதோ, அல்லது அவர்களின் நடிப்பின் மீதோ எந்த ஈடுபாட்டையும் காட்டுவதில்லை என்ற விமர்சனமும் உண்டு. இதன் தொடர்ச்சியாகவே தனுஷ் ரசிகர்கள் அவரோடு சிம்புவை ஒப்பிட்டு போட்டி கணக்கை தொடங்கி வைத்தனர்.

2010 காலகட்டத்தில் குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் தனுஷ். ஆனால், அவை எதுவும் பெரிய வெற்றி என்ற இடத்தை பிடிக்கவில்லை. மாறாக, வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படமே பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் என 6 பிரிவுகளில் தேசிய விருதை அள்ளிச்சென்றது. இந்த படத்தில் இடம்பெற்ற “ஒத்த சொல்லால, அய்யய்யோ நெஞ்சு அலையுதடி” உள்ளிட்ட பாடல்கள் சினிமா ரசிகர்களை முனுமுனுக்க வைத்தன.

தனுஷின் ஆரம்பகால படங்களில் இருந்து மாறுபட்டு, 2011ம் ஆண்டு வெளியான “மயக்கம் என்ன” திரைப்படம் மிகவும் கவனிக்கத்தக்க படமாக அமைந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை என்று சினிமாவை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்த செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இந்த படத்திலும் கவனம் ஈர்த்தது. வாய்ப்பு தேடும் போது, “சார் நான் நாய் மாதிரி வேலை செய்வேன்” என்று நடித்து காட்டுவது, தனுஷின் நடிப்பு ஆழத்தை புலப்படுத்துவதாக இருந்தது. ஒரு நடிகராக மட்டும் அல்லாது சிறந்த பாடகராகவும் அறியப்படும் நடிகர் தனுஷ், ‘மயக்க என்ன’ திரைப்படத்தில் “காதல் என் காதல்”, “ஓட ஓட ஓட தூரம் கொரையல”, “நான் சொன்னதும் மழை வந்துச்சா” என மூன்று பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால், அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார் தனுஷ் என்று, நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அவர் சொன்னது போல, ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய ‘3” படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். அனிருத்துக்கு இசை இயக்குநராக இதுதான் முதல் படம். தனுஷுக்கு ஒரு தயாரிப்பாளராகவும் இதுதான் முதல் திரைப்படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” பாடல் சர்வதேச கவனம் ஈர்த்த பாடலாக ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த பாடலையும் தனுஷே எழுதியிருந்தார். பிரதமரே இவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கும் அளவுக்கு பாடலின் வெற்றி திக்குமுக்காட வைத்தது. படமும் வியாபார ரீதியில் பெரும் வெற்றிபெற்றது.

 

இந்த காலகட்டத்தில் தான் தனுஷ் முதன் முதலில் இந்தியில் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 3 படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனை நாயகனாக நடிக்க வைத்து, எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். “வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, காக்காமுட்டை, அம்மா கணக்கு, நானும் ரவுடிதான்” என பல படங்களை தொடர்ந்து தயாரிக்க ஆரம்பித்தார். அதே நேரத்தில், நய்யாண்டி, மரியான் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடிக்கவும் செய்தார். 26 கோடியில் எடுக்கப்பட்ட மரியான் 28 கோடி ரூபாயே கலெக்ட் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், வேலைத்தேடி வெளிநாடு செல்லும் இளைஞன் அங்கு ஒரு கும்பளிடம் சிக்கி உயிர் தப்பிக்கும் காட்சியில், நடிப்பில் தன் அனுபவம் என்ன என்பதை பிரதிபலித்திருந்தார். உண்மையில் அந்த காட்சியில் அவரது நடிப்பை பார்ப்பவர்கள், இவருக்கா நடிப்பு வராது என்று விமர்சனம் எழுந்தது என கேள்வி எழுப்பக் கூடும். இதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் முதல் முறையாக அவர் இணைந்த ஷமிதாப் திரைப்படமும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. தங்க மகன், தொடரி, ஜர்னி ஃபக்கிர் போன்ற படங்களும் தனுஷுக்கு கை கொடுத்தது எனக் கூறமுடியாது.

இந்த இடைவெளியில் தனுஷ் நடிப்பில் பிளாக்பஸ்டராக அமைந்த படம் என்றால் அது வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை தான். அந்தப் படத்தில் இடம்பெற்ற அன்பு என்ற இளைஞனின் கதாபாத்திரம், வடசென்னை மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், வடசென்னை திரைப்படம், வடசென்னை மக்களின் உண்மையான வாழ்வியலை பேசாமல், சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது. என்னதான் விமர்சனம் எழுந்தாலும், விமர்சனங்களை கடந்து தானே தனுஷின் வெற்றியே அமைந்திருக்கிறது.

அதே ஆண்டு வெளியான மாரி 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், 2019ல் வெளிவந்த அசுரன், தனுஷின் சினிமா கேரியரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. 55 வயது மதிக்கத்தக்க நபரின் வேடத்தை ஏற்று தனுஷ் நடித்திருந்தது தமிழ் சினிமாவுக்கே புதிய கோணத்தை உருவாக்கி கொடுத்தது. ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்ற தனுஷ், அசுரன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும், 2வது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

வெற்றிமாறனுடன் இணைந்த 2 திரைப்படத்திலும் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்ததால், அவருடன் அடுத்தப் படத்தில் எப்போது இணைவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே வடசென்னை 2 எப்போது வரும் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தனுஷ் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம். காதல், ஆக்ஷன் என குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருந்த தனுஷின் சினிமா கதைக்களம், ஆடுகளம், அசுரன், கர்ணன் என சமூக இழிவுகளையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து பேசும் தளத்துக்கு நகர்ந்திருப்பதை, அவரை உன்னிப்பாக கவனிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் தனுஷ் ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்ட போதும், இதுவரை உருவத்தால் படவாய்ப்புகளை அவர் பரிகொடுத்ததில்லை. தனக்கான கதை எது என்பதை புரிந்து, அதை மட்டுமே தேர்வு செய்து, ஒவ்வொரு படங்களிலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாலேயே சினிமா ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். சர்வதேச அளவில் தமிழ் சினிமாவுக்கான இடம் மிகவும் முக்கியமானதென்றாலும்,இந்திய சினிமா உலகமே அண்ணார்ந்து பார்க்கும் வளர்ச்சியை தனுஷ் எட்டிக்கொண்டிருக்கிறார் என்றால் இது மிகையில்லை. ஒருபுறம் தமிழ் படங்களில் நடித்துக்கொண்டே, இந்தி மொழிக்கு தோதான கதைகளை தேர்வு செய்து அங்கும் நடித்து வரும் தனுஷ், சர்வதேச சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவர் நடித்து 2018ல் வெளியான பக்கிரி திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து “க்ரேமேன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் goal அடிப்பவர் தனுஷ். 2017ல் பவர் பாண்டி என்ற ஒரு படத்தை இயக்கி, இயக்குநர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவரை சுற்றி எண்ணற்ற சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் சுழன்றடித்திருக்கின்றன. தனுஷ் தங்கள் பிள்ளைதான் என்று நீதிமன்ற படியேறிய தம்பதியை, அனைவரும் அறிவர். ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றால் அது தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான செய்திதான். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்திருந்த நிலையில், இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனனர். இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழப் போவதாக அறிவித்துள்ளனர். இன்னொரு திருமணம் செய்வாரா? அல்லது மகன்களுக்காக திருமணம் செய்யாமலேயே வாழ்வாரா என்பதெல்லாம் அவரது தனிப்பட்ட விஷயம். எப்படியிருந்தாலும், துவக்கத்தில் பிடிக்காமலேயே சினிமாவில் காலடி வைத்திருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் தனுஷை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா வரலாற்றை தொகுக்க முடியாது…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.