பெண்கள் இலவச பேருந்து பயணம்; நடத்துனர்களுக்கு அறிவுரை

இலவச பயணம் மேற்கொள்பவர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என நடத்துனர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.…

இலவச பயணம் மேற்கொள்பவர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என நடத்துனர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாநகர
பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதன்படி முதலமைச்சராக பதவியேற்றதும், பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையை வெளியிட்டார்.

இந்நிலையில், சென்னை மாநகர பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும் என்றும் பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார். நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று கூறி பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது எனவும், வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ , ஏளனமாகவோ , இழிவாகவோ, பேசக்கூடாது எனவும் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடத்து கொள்ள வேண்டும் எனவும் மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.