கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்த ஹெச்.சி.எல் நிறுவனர்; புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரும், அதன் தலைவர் ரோஷினி நாடாரும் பங்கேற்றனர்.  மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். மதுரை புது…

நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரும், அதன் தலைவர் ரோஷினி நாடாரும் பங்கேற்றனர். 

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். மதுரை புது நத்தம் சாலையில் ரூ.206 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (ஜூலை 15) திறந்து வைத்தார். காமராஜர் பிறந்த நாளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரும், அதன் தலைவர் ரோஷினி நாடாரும் பங்கேற்றனர்.  பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் குறித்துக் கூறியதாவது:

“ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார்.

ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷினியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை. இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.

“உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய” வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான இவரும் உங்களைபோல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.