சுற்றுலாப் பயணிகள் அதிகம் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடுகளில் முதல் நாடாக இந்தியா உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சுற்றுலா செல்லும் நாட்டில் தனியுரிமை, சுதந்திரத்துடன் அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வசதிக்காக வாடகை கார் எடுத்துக் கொண்டு, சுயமாக ஓட்டிச் செல்லும் கலாசாரம் வெளிநாடுகளில் சகஜமானது. இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களில், பெரும்பாலானவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடாக இந்தியா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமீப காலமாக பழக்கப்பட்ட சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பது நமக்கே நாள்தோறும் புதிய அனுபவத்தை அளிக்கிறது. அப்படியென்றால், முன் அறிமுகமில்லாத சாலை அமைப்புகளில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு புதிய விதிகள், சக வாகன ஓட்டிகளின் போக்குவரத்து ஒழுங்கு என பதற்றமடைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைக் கண்டறிய உலகம் முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பிரிட்டனைச் சேர்ந்த ‘ஸ்கிரேப்கார் கம்பேரிஷன்’ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தரவரிசையில் 10-க்கு 7.15 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்;
- இந்தியா
- வெனிசூலா
- ஜிம்பாப்வே
- மொராக்கோ
- தாய்லாந்து
- சீனா
- துனிசியா
- பிரேசில்
- கொலம்பியா
- மலேசியா
கார்கள், இருசக்கர, கனரக வாகனங்களுடன், ரிக்ஷா முதல் கால்நடைகள் வரை இந்திய சாலைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. மேலும், அதிக போக்குவரத்து நெரிசலுடன் கணிக்க முடியாத நிலைமைகளுக்குப் பெயர் பெற்றதாக இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் அதிக ஆபத்துகளை உணர்வதாக வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்
இவற்றை தடுக்க வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் புதிய இடங்களுக்குச் சென்று வாகனங்களை ஓட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில் பயணத்துக்கு ஏற்ற சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக அந்த வாகனத்தில் ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதி நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளூர் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். நீண்ட பயணங்களில் போதிய இடைவேளைகள் எடுக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, சாலையில் முழு கவனத்துடன் மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டினால் இனிமையான பயணம் அனைவருக்கும் சாத்தியம்.







