கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் சர்மிளா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவரை திமுக எம்.பி.கனிமொழி மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை
இயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர். அண்மையில்
பிரபலமான சர்மிளாவைப் பலரும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். சர்மிளாவுக்கு
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர்
செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று அவர் பணியை திடீரென ராஜிநாமா செய்தார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்து தான் எங்களது பேருந்தில் பயணித்தனர். கனிமொழி பேருந்தில் பயணித்த போது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன். நான் விளம்பரம் தேட முயற்சி செய்வதாக பேருந்து உரிமையாளர் குற்றம்சாட்டி, வாக்குவாதம் செய்ததால் பணியை ராஜினாமா செய்தேன் என்றார்.
இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், எனக்கும் ஓட்டுநர் சர்மிளாவுக்கும் எந்த பிரச்னையுமில்லை. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு தவறு. அவர்களே பணியிலிருந்து விலகி கொள்கிறேன் என்றார்கள்.
நான் ஏதும் சொல்லவில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் பணியில் தொடரலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஒட்டுநர் சர்மிளாவைக் போனில் தொடர்பு கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி, எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்ய தயார் எனவும், தைரியமாக இருக்க வேண்டும் எனவும் வேறு எங்கு பணிவேண்டுமானாலும் வாங்கி தருகிறேன் என்று உறுதியளித்தார். அத்துடன், பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்கு ஷர்மிளா மறுத்து விட்டதாகவும், தான் ஆட்டோ ஓட்ட செல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான பண உதவிகள், வங்கி கடன் உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருகின்றேன் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
மேலும், பெண் ஓட்டுநர் சர்மிளாவை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எந்த உதவியும் செய்ய தயார் என்றும், தைரியமாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.








