கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சேமிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். நிதி மேலாண்மை என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். பணத்தை முறையாக கையாளத் தெரியாவிட்டால் கடன் சுமைகளுக்கு ஆளாக நேரிடும்.
குடும்பத்துக்கான நிதி மேலாண்மை செய்வது என்பது ஆண்களுடைய கடமை, பெண்களுடைய கடமை என ஒதுங்காமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமையும். இன்றைய காலகட்டத்தில் சேமிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அனைவரிடமும் இருந்தாலும் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்கிற விஷயத்தில் எல்லோர் மத்தியிலும் குழப்பம் உள்ளது. தனிநபர் சீட்டு, ஏலச்சீட்டு, ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட், போடுவது என அடிப்படையான சில சேமிப்பு முறைகள் குறித்து நமக்குத் தெரிந்திருந்தாலும், சில முக்கியமான நிதி சார்ந்த சேமிப்புகளை கண்டிப்பாக நடுத்தர குடும்பத்தினர் கடைப்பிடிக்க வேண்டும் என கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். அந்த வகையிலான நிதி சார்ந்த திட்டமிடல் குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம் வாங்க!
1. அவசர கால நிதி (Emergency Fund)
நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நம்முடைய வருவாயில் இருந்து சிறு பகுதியையாவது கண்டிப்பாக அவசரகால நிதிக்கென தனியாக ஒதுக்க வேண்டும். வருமானம் ஈட்டும் நபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது வருவாய் திடீரென பாதிக்கப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் அளவுக்கு 3 மாத சம்பளமாவது நம்முடைய அவசரகால நிதியாக சேமித்து வைத்திருக்க வேண்டும். அதுவே 6 மாத சம்பளமாக சேமித்து வைத்திருந்தால் மிகவும் சிறப்பு. இது எதிர்காலம் குறித்த அச்சத்தை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் அடுத்தகட்டத்தை நோக்கி நம்மைச் செலுத்துவதற்கு மிகவும் உதவும்.
வருமானத்தில் 30 முதல் 40 சதவீதத்தை கட்டாயமாக சேமிக்க வேண்டும். அதில், 10 முதல் 15 சதவீதம் அவசரகால நிதிக்கு என ஒதுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள். வேலை இழப்பு அல்லது மருத்துவச் செலவு என ஏதாவது எதிர்பாராத பிரச்னை வந்துவிட்டால் உடனே தனிநபர் கடன் அல்லது கிரெடிக் கார்டு கடன் குறித்து சிந்திப்பதைத் தவிர்த்து, வரும் முன்னரே சிந்திந்து குறைந்தபட்ச தொகையை அவசரகால நிதியாக சேமித்து வைத்தால் எதிர்காலம் குறித்த ஐயத்தை தவிர்க்கலாம்.
2. மருத்துவக் காப்பீடு (Health Insurance)
எதிர்பாராத மருத்துவச் செலவை சமாளிக்க முடியுமா என்றால் பெரும்பாலானோரின் பதில் முடியாது என்பதாகவே இருக்கும். லட்சங்களில் சம்பாதித்தாலும் மருத்துவச் செலவு என்ற ஒன்று குடும்பத்தில் வந்துவிட்டால் அது அவர்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சிறு உடல்நலக் குறைவுகளை நமது கையில் இருக்கும் பணத்தை வைத்து சரிசெய்து விடலாம். ஆனால், எதிர்பாராத விபத்து, நோய் போன்றவை நம்மை பெரும் கடனாளியாக்கிவிடும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள நாம் என்னென்ன செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பதுபோல எதிர்பாராத மருத்துவச் செலவை சமாளிப்பதிலும் நாம் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நம்முடைய குறைந்தபட்ச சேமிப்பைக் கரையாமல் பாதுகாக்கவும், கடனாளியாகாமல் இருக்கவும் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

3. ஆயுள் காப்பீடு (Life Insurance)
குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு ஆயுள் காப்பீடு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் நபர் எதிர்பாராமல் இறக்கும்பட்சத்தில் குடும்பத்தினருக்கு ஏற்படும் நிதிச் சிக்கல்கள், கடன் சிக்கல்கள், குடும்பச் சுமைகளை சமாளிக்க மாற்று ஏற்பாடாக ஆயுள் காப்பீடு உதவும். மருத்துவக் காப்பீடு ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியம்.
4. எதிர்காலத்துக்கான சேமிப்பு (Savings For Future)
சேமிப்பு என்பது ஒவ்வொருவருடைய வருமானம், ஆசை, எதிர்காலத் திட்டம் குறித்து மாறுபடும். சேமிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் எல்லோருடைய சேமிப்பும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. நம்முடைய ஊதியம் எவ்வளவு, எதிர்காலத் திட்டங்கள் என்ன, அதற்கான சேமிப்பை எப்படி உருவாக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியம்.
வீடு கட்டுவது, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, ஓய்வுகால சேமிப்பு போன்ற நம்முடைய திட்டம் சார்ந்த சேமிப்பை உருவாக்க வேண்டும். அதற்கேற்றவாறு குறைந்த கால முதலீடு செய்ய வேண்டுமா அல்லது நீண்டகால முதலீடு செய்ய வேண்டுமா என்பதை முதலில் பட்டியலிட வேண்டும். எதை முதலில் செய்ய வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். பின்னர், அதை நோக்கி நமது சேமிப்பைத் திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும்.
நிதி மேலாண்மை என்பது நம் நாட்டுக்கு மட்டுமல்ல நம்முடைய வீட்டுக்கும் மிகவும் அவசியமாகும். எனவே, முறையாகத் திட்டமிட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
-ம.பவித்ரா










