பிரதமர் மோடியை வரவேற்ற இபிஎஸ்…வழியனுப்பிய ஓபிஎஸ்…பாஜக யார் பக்கம்?

சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில், இன்று பிரதமரை அகமதாபாத்திற்கு வழியனுப்பும் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பங்கேற்றார். அதிமுகவில் ஒற்றை…

சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில், இன்று பிரதமரை அகமதாபாத்திற்கு வழியனுப்பும் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பங்கேற்றார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்ததிலிருந்து இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த பிறகு, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளாக பிரிந்த நிலையில் அந்த அணிகளை இணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதில் பாஜகவின் பங்களிப்பும் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர்களான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மீண்டும் இரு அணிகளாக தற்போது பிரிந்துள்ளனர். கடந்த ஜூலை 11ந்தேதி சென்னையில் கூடிய அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 62 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன், கட்சி அலுவலகம், கட்சியின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் அவர் பக்கம் வந்துள்ளன. எனினும் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதம் என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவருகிறார். எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டே நீக்கியதாக கூறியது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

இப்படி இரு தரப்பிலும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்க அதிமுகவின் கூட்டணி கட்சியாகவும் மத்தியிலும் ஆளும் கட்சியாகவும் உள்ள பாஜக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி தமிழ்நாடு அரசியலில் சுழன்றடித்துக்கொண்டேயிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரில் ஒருவர் பக்கம் பாஜக நிற்குமா- அல்லது இருவரையும் சேர்த்து வைக்கும் பணியில் மீண்டும் ஈடுபடுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் இதில் பாஜக தலையிடாது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஆரம்பம் முதலே கூறிவருகின்றனர். ஆனாலும் அதிமுக உட்கட்சி பூசலை தீர்க்க பாஜக என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி தமிழக அரசியலில் தொக்கி நிற்கிறது. தற்போது வரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரண்டு தரப்பினரையும் சமதூரத்தில் வைத்தே பாஜக பார்ப்பதாக சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக்குழுவில் பல்வேறு களேபரங்கள் நடைபெற்று முடிந்த பின்னர் அன்று மாலையே டெல்லி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் ஆதரவை தன் பக்கம் கோருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற சந்திப்புகள் ஏதும் அப்போது நிகழவில்லை. சமீபத்தில் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதும்  பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தனியாக சந்தித்து பேசுவார் என கருதப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பும் நிகழவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் நிக்ழச்சியை தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி,  இன்று புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்கிற பரபரப்பு எழுந்தது. பிரதமரின் இந்த வருகையின்போது இருவரில் ஒருவரை சந்தித்து பேசினால் பாஜக யார் பக்கம் என்கிற கேள்விக்கு விடை தெரிந்துவிடும் என தமிழக அரசியல் களம் தீவிரமாக உற்றுநோக்கியது. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேசவில்லை.

நேற்று  பிரதமர் சென்னை வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதே நேரம் இன்று பிரதமரை விமான நிலையத்திலிருந்து அகமதாபாத்திற்கு வழியனுப்பும் நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அதிமுகவை சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே சட்டப்போரட்டம் நடைபெற்றுவருவதாலும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்காத சூழல் இருப்பதாலும்,  ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் சமதூரத்தில் வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதை தொடரவே பாஜக விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதையே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.