மீன்பிடி தடை காலம் முடிந்துள்ள நிலையில், கொட்டும் மழையிலும் மீன்பிரியர்கள் அதிகாலையில் துறைமுகத்தில் திரண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை 60
நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக
தற்போது 60 நாட்களாக மீன்பிடித்தடைக் காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த
தடைக்காலம் கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்று அனைத்து வகையான படகுகளும்
கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.
இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி ஆயிரக்கணக்கானோர் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் திரண்டனர். மீன்கள் வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
கடந்த 60 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று சிறிது குறைந்து காணப்பட்டதால் அதிக அளவில் மீன்களை வாங்க முடிந்ததாக பொதுமக்களும் தெரிவித்தனர். ஒரு கிலோ வஞ்சரம் மீன் தற்போது 750 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 550 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், கனவா மீன் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இறால் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனவா, இறால், உள்ளிட்டவைகள் அதிக அளவில் கிடைத்து இருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தடை காலம் முடிந்து மீன் விற்பனை சூடு பிடித்துள்ளது. மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்து மீன் விற்பனை தொடங்கி இருப்பதால் மீனவர்கள் மட்டுமின்றி ஐஸ் ஏற்றுவோர், சுமை தூக்கிவோர், சிறு குறு மீன் வியாபாரிகள் என 1 லட்சம் தொழிலாளர்கள்
நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.







